Published : 21 Mar 2014 01:58 PM
Last Updated : 21 Mar 2014 01:58 PM

மதிமுக தேர்தல் அறிக்கை நாளை வெளியீடு: 23-ல் சிலைமானிலிருந்து தேர்தல் பிரச்சாரம் தொடங்குகிறார் வைகோ

மதிமுக தேர்தல் அறிக்கையில் ஈழப் பிரச்சினைக்கு உரிய தீர்வு, பூரண மது விலக்கு உள்ளிட்ட அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பதாக மதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

பாஜக கூட்டணியில் விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, தேனி, காஞ்சிபுரம் பெரும்புதூர், ஈரோடு ஆகிய 7 தொகுதிகளில் மதிமுக போட்டியிடுகிறது. தூத்துக்குடியில் மாவட்டச் செயலாளர் ஜோயல், தென்காசியில் மதிமுக-வின் அரசியல் ஆய்வு மைய உறுப்பினர் டாக்டர் சதன் திருமலைக்குமார், விருதுநகரில் பொதுச் செயலாளர் வைகோ, தேனியில் கொள்கை விளக்க அணி செயலாளர் அழகுசுந்தரம், காஞ்சிபுரத்தில் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, பெரும்புதூரில் பொருளாளர் டாக்டர் மாசிலாமணி, ஈரோட்டில் தற்போதைய எம்.பி. கணேசமூர்த்தி ஆகியோரும் போட்டியிடுவார் என வைகோ வியாழக்கிழமை அறிவித்தார்.

இதையடுத்து 22-ம் தேதி மதிமுக தேர்தல் அறிக்கையை சென்னையில் வெளியிடும் வைகோ, 23-ம் தேதி விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியின் எல்லையான மதுரை மாவட்டம் சிலைமானிலிருந்து தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார்.

மதிமுக தேர்தல் அறிக்கையில், ஈழப் பிரச்சினைக்கு உரிய தீர்வை எட்டுவது, பூரண மதுவிலக்கு, முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு உரிய தீர்வு, நதிநீர் இணைப்பு, விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பெருக்குதல், சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை தடுத்தல் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள் ளதாக மதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

எனது குருவை வீழ்த்துவேன்: அழகுசுந்தரம்

குருஷேத்திரப் போரில் துரோணரை வீழ்த்திய அர்ச்சுனனைபோல எனது குருவை வீழ்த்துவேன் என்று தேனி மதிமுக வேட்பாளர் அழகுசுந்தரம் தெரிவித்தார்.

தேனி தொகுதியில் திமுக வேட்பாளராக பொன்.முத்துராமலிங்கம் போட்டி யிடுகிறார். இங்கு மதிமுக வேட்பா ளராக கட்சியின் கொள்கை விளக்க அணிச் செயலாளரும் பொன்.முத்து மதிமுக-வில் இருந்தபோது அவரது சிஷ்யப்பிள்ளையாய் இருந்த அழகுசுந்தரத்தை நிறுத்தப் போவதாக வியாழக்கிழமை ‘தி இந்து’வில் செய்தி வெளியாகி இருந்தது. அதேபோல், மதிமுக-வின் தேனி வேட்பாளராக அழகு சுந்தரத்தை அறிவித்திருக்கிறார் வைகோ.

அரசியல் குருவை எதிர்த்து போட்டியிடுவது குறித்து அழகுசுந்தரத்திடம் கேட்டபோது, ’’குருஷேத்திரப் போரில் துரோணரை எதிர்த்து களத்துக்கு வந்து வீழ்த்திய அர்ச்சுனனைப் போல நான் களத்துக்கு வருகிறேன். பாஞ்சாலியின் துகில் கொண்ட துரியோதனர்களைப் போல, இலங்கை இறுதிக் கட்டப் போரில் தமிழர்களை கருவறுத்து, தமிழ் பெண்களை சூறையாடிய கொடியவன் ராஜபக்‌சேவுக்கு துணைபோன துரோகிகளை எதிர்த்து வீழ்த்துவதுதான் இன்றைய சூழலில் இந்த சிஷ்யனின் கடமை எனக் கருதுகிறேன். அந்த வகையில், திமுக வேட்பாளரை வீழ்த்தும் அர்ச்சுனனாகவே களத்துக்கு வருகிறேன்’’ என்றார் அழகுசுந்தரம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x