Published : 19 Nov 2014 10:00 AM
Last Updated : 19 Nov 2014 10:00 AM

100 வயது நிரம்பிய மூத்த குடிமக்களை கவுரவித்தார் அமைச்சர்

சென்னையில் 100 வயது நிரம்பிய மூத்த குடிமக்கள் மற்றும் மூத்த தம்பதிகளை சமூக நலத்துறை அமைச்சர் பா.வளர்மதி பரிசுகள் வழங்கி, பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.

முதியோர் நலன் காக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தை நிறைவேற்றும் வகையில், சர்வதேச முதியோர் மற்றும் குழந்தைகள் தினம் நவம்பர் 18-ம் தேதி கொண்டாடப்படுகிறது.

முதியோரின் சேவைகளை அங்கீகரித்து, அவர்களின் அனுபவம், அறிவு ஆகியவற்றை வெளிக்கொணர தமிழகத்தில் ஆண்டுதோறும் மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் இந்த விழா நடைபெறுகிறது.

இதையொட்டி சென்னை சாந்தோம் சமூக நலக் கூடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில் 100 வயது நிரம்பிய சூசை முத்து, ருக்மணியம்மாள், லட்சுமியம்மாள் ஆகியோரை அமைச்சர் வளர்மதி கவுரவித்தார். அதே போன்று 90 வயது நிரம்பிய 4 ஆண்கள், 16 பெண்கள் மற்றும் 5 மூத்த தம்பதியினர் கவுரவிக்கப்பட்டனர்.

மூத்த குடிமக்களுக்கு சேவை புரிந்ததற்காக மருத்துவர் எஸ்.ஜெயச்சந்திரன், திருநங்கை எஸ்.நூரி, ஆஷா நிவாஸ் அமைப்பின் தலைவர் டாக்டர். குரியன் தாம்ஸ் ஆகியோருக்கு சாதனையாளர் விருதுகள் வழங்கப்பட்டன.

மேலும், விழாவின் இறுதியில், முதியோர்களின் குழு நடன நிகழ்ச்சியும் ‘ஒற்றுமை உயர்வு’ என்ற தலைப்பில் நாடகமும் நடைபெற்றது.

இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி, மாநில மகளிர் ஆணையத்தின் தலைவர் விசாலாட்சி நெடுஞ்செழியன், சமூக நல வாரியத்தின் தலைவர் சி.ஆர்.சரஸ்வதி, மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.ராஜலட்சுமி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x