

விலைவாசியை கட்டுப்படுத்த முடியாத ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது என்றார் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்.
தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் அவர் மேலும் பேசியது: “தமிழ்நாட்டின் முதல்வராக கருணாநிதி 5 முறை இருந்து, சிறப்பான ஆட்சி நடத்தி, ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை மக்களுக்கு நிறைவேற்றிய திட்டங்கள் எண்ணற்றவை.
இந்த திருவையாறு சட்டப்பேரவை தொகுதியில் ரூ.51 கோடியில் பூண்டி - செங்கரையூர் இடையே கொள்ளிடம் ஆற்றில் புதிய பாலம், மனத்திடல் - வளப்பக்குடி இடையே குடமுருட்டி ஆற்றில் பாலம், கண்டியூர், ஆச்சாம்பட்டி, புதுக்குடி நடுநிலைப் பள்ளிகளை தரம் உயர்த்தியது, திருவையாறு, மருவூர், தோகூர், பூதூரில் புதிய காவல் நிலையங்கள் கட்டப்பட்டது திமுக ஆட்சியில் தான்.
2011-ல் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலின்போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால், செய்வோம் என பல வாக்குறுதிகளை வாரி வழங்கினார் ஜெயலலிதா. திமுக ஆட்சியில் 2 மணிநேரம்தான் மின்வெட்டு. இப்போதோ, 12 மணி நேரம் மின்வெட்டு. விஷம் போல் ஏறிவரும் விலைவாசியை கட்டுப் படுத்த முடியாத ஆட்சி தமிழகத்தில் நடந்து வருகிறது.
மத்தியில் மதச்சார்பற்ற ஒரு ஆட்சி அமையும், கருணாநிதி கை காட்டும் ஒருவர் பிரதமராகும் சூழலை உருவாக்கித் தர நீங்கள் துணை நிற்க வேண்டும். இதற்காக தஞ்சை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவுக்கு வாக்களிக்க வேண்டும்” என்றார் ஸ்டாலின்.
தொடர்ந்து ஒரத்தநாடு, பாப்பநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, அதிராம்பட்டினம், திருவையாறு ஆகிய இடங்களில் வேனில் இருந்தவாறே பேசிய ஸ்டாலின், இறுதியாக தஞ்சை திலகர் திடலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார்.
பிரசாரத்தில் வேட்பாளர் டி.ஆர்.பாலு, கட்சியின் மாவட்டச் செயலர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி, முன்னாள் எம்.பி எல்.கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.