

திருச்சி மாநகரிலுள்ள நடைபாதைகளை ஆக்கிரமித்துள்ளதாலும், பராமரிப்பின்றி குண்டும் குழியுமாக காணப்படுவதாலும் அவற்றைப் பயன்படுத்த முடியாமல் பாதசாரிகள் தவித்து வருகின்றனர்.
பொதுமக்கள் பாதுகாப்பாக நடந்து செல்ல வேண்டும் என்பதற்காக சாலையோரங்களில் நடை பாதைகள் அமைக்கப்படுகின்றன. ஆனால், திருச்சி மாநகரில் கன்டோன்மென்ட், தில்லை நகர், சாலை ரோடு, சாஸ்திரி ரோடு, டிவிஎஸ் டோல்கேட், பாலக்கரை, புத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள நடைபாதைகள் வாகன நிறுத்தங்களாக மாறிவிட்டன. வணிக நிறுவனங் கள், குடியிருப்புகளுக்கு வருவோர், தங்களது இரு சக்கர வாகனங்களை நடைபாதைகளில் நிறுத்திக் கொள்வதால், பாதசாரிகளால் அவற்றை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்படுகிறது.
நடைபாதையில் கடைகள்
இதுதவிர வணிக நிறுவனங்கள், கடை உரிமையாளர்கள் தங்களது ‘எல்லையை’ நீட்டித்து நடைபாதை வரை பொருட்களை வைத்துக் கொள்கின்றனர். பெரும்பாலான உணவகங்களில் பரோட்டா, தோசைகளுக்கான அடுப்புகளும், டீக்கடைகளின் ஸ்டால்களும் நடைபாதைகளை ஆக்கிரமித்தே அமைக்கப்பட்டுள்ளன. மளிகைக் கடைகள், பழக்கடைகள், துணிக்கடைகளும் இதற்கு விதிவிலக்கல்ல. இதுமட்டுமின்றி சில இடங்களில் சாலையோர பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், தங்களது வீட்டின் முன் யாரும் வாகனங்களை நிறுத்திவிடக்கூடாது என்ற நோக்கில் அங்கு மரக்கட்டைகள், கயிறுகளால் தடுப்பு ஏற்படுத்தி நடைபாதையையே தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டனர்.
கண்டுகொள்ளாத அதிகாரிகள்
இவை மட்டுமின்றி சாலையோரங்களில் அமைக்கப்படும் தற்காலிக கடைகள், தரைக்கடைகள், தள்ளுவண்டி கடைகள், பெட்டிக்கடைகள் போன்றவையும் நடைபாதை களின் மீதே அமைக்கப்படுகின்றன. காவல் துறையினரும், மாநகராட்சி அதிகாரிகளும் இவற்றை கண்டுகொள்ளாமல் விடுவதால், கடைகளின் எல்லை நாளுக்குநாள் விரிவடைந்து நடைபாதையை முழுமையாக ஆக்கிரமித்து விடுகின்றன. இவ்வாறாக, திருச்சி மாநகரிலுள்ள பல முக்கிய சாலைகளின் நடைபாதைகள் தற்போது கடைகளாகவும், வாகன நிறுத்தங்களாகவும் மாறி விட்டன. சில இடங்களில் நடைபாதைகள் இருக்கும் சுவடே தெரியாத அளவுக்கு மாயமாகிவிட்டன.
பராமரிப்பில் ஆர்வமில்லை
இவ்வாறு பெரும்பாலான இடங்களில் ஆக்கிர மிப்பு செய்யப்பட்டுள்ள நிலையில், மீதம் இருக்கும் நடைபாதைகளையும் பராமரிக்க மாநகராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. குறிப்பாக, மழைநீர் வாய்க்கால்களின் மீது சிமென்ட் பலகைகளைப் பதித்து, நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ள இடங்களில், ஆங்காங்கே பள்ளங்களைக் காண முடிகிறது. மேலும், சில இடங்களில் நடைபாதைகள் குண்டும், குழியுமாக காணப்படுகின்றன. இவற்றில் நடந்து செல்லும் பொதுமக்கள் இரவு நேரங்களில் தடுமாறி விழும் நிகழ்வுகளும் நடைபெறுகின்றன. மேலும், சிமென்ட் பலகைகளில் நீட்டிக் கொண்டிருக்கும் கம்பிகளால் பலரது பாதங்களில் காயம் ஏற்படுகிறது.
விளம்பர பதாகைகளால் அவதி
இவைமட்டுமின்றி திருச்சி மாநகருக்கு வரும் அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்களை வரவேற்கும் வகையில் பிளக்ஸ் பேனர்கள், கொடிகள் கட்டுவதற்கான இடங்களாகவும் நடைபாதைகள் மாறிவிட்டன. இதனால் நடைபாதையில் நடந்து செல்ல நினைப்பவர்கள்கூட, அடிக்கடி சாலையில் இறங்கி, ஏறி நடக்க வேண்டிய கட்டாய சூழல் ஏற்படுகிறது.
நடைபாதையில்லா சாலைகள்
இருக்கும் நடைபாதைகள் இப்படியிருக்க, மாநகரில் வாகனங்கள், பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையங்களைச் சுற்றியுள்ள சாலைகள், வயலூர் சாலை, ராக்கின்ஸ் சாலை, காந்தி மார்க்கெட் பகுதியிலுள்ள சாலைகள், கே.கே.நகர் சாலை, ஆட்சியர் அலுவலக சாலை, பழைய தஞ்சை செல்லும் சாலை, பாலக்கரை மெயின்ரோடு, பழைய மதுரை சாலை, சிந்தாமணி சாலை போன்றவற்றில் நடைபாதை என்னும் கட்டமைப்பே இதுவரை உருவாக்கப்படவில்லை. இதனால், அவ்வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள் அதிக சிரமங்களைச் சந்திக்க வேண்டியுள்ளது.
கேள்விக்குறியாகும் பாதுகாப்பு
நடைபாதை ஆக்கிரமிப்பு, வாகன நெரிசலால் சாலைகளில் நடந்து செல்ல முடியாமல் பாதசாரிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். இதுபோன்ற சமயங்களில் பலர் வாகனங்கள் மோதி விபத்தில் சிக்கிக் கொள்கின்றனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள், முதியவர்கள் என காவல்துறையின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
நாளுக்குநாள் அதிகரிக்கும் மக்கள்தொகை, வாகனங்களின் பெருக்கம் ஆகியவற்றுக்கு ஏற்ப, மாநகரிலுள்ள சாலைகளின் உட்கட்டமைப்பு, நடைபாதைகளை விரிவாக்கம் செய்யாவிட்டால் பாதசாரிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விடும். இதை உணர்ந்து மாநகராட்சி அதிகாரிகளும், காவல்துறையினரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
சாலை அமைக்கும்போதே…
பொன்மலைப்பட்டியைச் சேர்ந்த தினேஷ் கூறும்போது, “நடைபாதை ஆக்கிரமிப்புகளை எக்காரணம் கொண்டும் அனுமதிக்கக்கூடாது. குறிப்பாக நடைபாதையில் வாகனங்களை நிறுத்துவோருக்கு காவல்துறை மூலம் உடனுக்குடன் அபராதம் விதிக்க வேண்டும். குறிப்பாக மின் கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்களை நடைபாதையில் வைக்கக்கூடாது.
மேலும், புதிதாக சாலைகள் அமைக்கும்போது, அவற்றில் நடைபாதைகளுக்கு இடம் ஒதுக்கி, அதற்கான பணிகளையும் உடனுக்குடன் முடிக்க வேண்டும். மாநகராட்சி நிர்வாகமும், காவல்துறையும் இணைந்து இதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்” என்றார்.
காவல்துறை ஒத்துழைப்பு தரும்
இதுகுறித்து திருச்சி மாநகர குற்றம் மற்றும் போக்குவரத்து பிரிவு துணை ஆணையர் பிரபாகரனிடம் கேட்ட போது, “சாலைகளில் நடந்து செல்லும் பாதசாரிகளுக்கான பாதுகாப்பில் காவல்துறை அக்கறை கொண்டுள்ளது. நடைபாதைகளிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, அவற்றைப் பராமரிக்க வேண்டிய பொறுப்பு மாநகராட்சி நிர்வாகத்திடம் உள்ளது. எனவே, அவர்கள் கேட்கும் பட்சத்தில், நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகர காவல்துறை முழு பாதுகாப்பும், ஒத்துழைப்பும் அளிக்கும்” என்றார்.
விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்
திருச்சி மாநகராட்சி ஆணையர் என்.ரவிச்சந்திரனிடம் கேட்டபோது, “திருச்சி மாநகரிலுள்ள நடைபாதைகளில் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் ஆக்கிரமிப்புகள் விரைவில் அகற்றப்படும். அதேபோல, சேதமடைந்த நடைபாதைகள் உடனடியாக சீரமைக்கப்படும். போக்குவரத்து அதிகமுள்ள முக்கிய சாலைகளில், போதுமான அளவு அகலம் இருந்தால் அங்கு புதிதாக நடைபாதைகள் உருவாக்கப்படும்” என்றார்.
2 ஆண்டுகளில் 315 பேர் பலி
167.23 சதுர கி.மீ. பரப்பளவுள்ள திருச்சி மாநகருக்குள் 35 கி.மீ.க்கு தேசிய நெடுஞ்சாலை, 21.60 கி.மீ.க்கு மாநில நெடுஞ்சாலை, 61 கி.மீ.க்கு மாவட்ட சாலைகள், 729.91 கி.மீ.க்கு மாநகராட்சி மூலம் தார் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர சிமென்ட் சாலை, பேவர் பிளாக் சாலை உள்பட மாநகர எல்லைக்குள் மொத்தம் 1,411.97 கி.மீ நீளத்துக்கு சாலைகள் உள்ளன. இவற்றில், கடந்த 2 ஆண்டுகளில் நடைபெற்ற விபத்துகளின்போது 315 பேர் பலியாகியுள்ளனர். 1,589 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் பாதசாரிகளும் அடங்குவர்.
நடவடிக்கையில் பாரபட்சம் கூடாது
தமிழ்நாடு சாலையோர வியாபாரிகள் கூட்டமைப்பின் ஆலோசகரும், வழக்கறிஞருமான கமருதீன் கூறும்போது, “சாலை என்பது வாகன ஓட்டிகளுக்கு மட்டும் சொந்தமானது அல்ல. பாதசாரிகளுக்கும் அதில் உரிமை உள்ளது.
எனவேதான், சாலையோரங்களில் நடைபாதைகள் அமைக்கப்படுகின்றன. ஆனால், அவற்றை முறையாக பராமரிக்காமல் விடுவதால், பொதுமக்களால் பயன்படுத்த முடிவதில்லை. நடைபாதைகளை சிறு வியாபாரிகள் மட்டும் ஆக்கிரமிப்பு செய்வதில்லை. கடைக்காரர்கள், பெரிய வணிக நிறுவனத்தினர் என பலரும் ஆக்கிரமித்துள்ளனர். ஆனால், நடவடிக்கை என வரும்போது, சிறு வியாபாரிகளை மட்டும் துரத்தி அடித்துவிட்டு மற்றவர்களை கண்டுகொள்வதில்லை. இது தவறான செயல். பாரபட்சமின்றி அனைவர் மீதும் சமமான நடவடிக்கை எடுக்க வேண்டும். நடைபாதைகளில், வாகனங்களை நிறுத்தவிடாமல் காவல்துறையினர் தடுக்க வேண்டும்” என்றார்.