

ரூ.5000-க்கும் அதிகமான பணபரிவர்த்தனை அனைத்தையும் ஆன்லைனில் மேற்கொள்ளவதை கட்டாயமாக்கக்கோரிய வழக்கில் மத்திய அரசும், ரிசர்வ் வங்கி ஆளுனரும் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக மதுரையைச் சேர்ந்த பொதுநலன் வழக்கு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் கே.கே.ரமேஷ், உயர் நீதிமன்ற கிளையில் பொதுநலன் மனுத் தாக்கல் செய்தார்.
அதில் நாட்டில் கருப்பு பணத்தை ஒழிக்கவும், லஞ்சம் வாங்குவதை தடுக்கவும், தீவிரவாத செயல்களுக்கும் அதிகளவு பணம் மாற்றப்படுவதை தடுக்கவும் பணிபரிவர்த்தனைக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும்.
பல்வேறு வெளிநாடுகளில் ஆன்லைன் பணப்பரிவர்த்தனைக்கு அதிக முக்கியவத்தும் வழங்கப்படுகிறது.
தென்கொரியா, சீனா, ஹாங்ஹாங், சிங்கப்பூர், ஸ்பெயின், அமெரிக்கா, இங்கிலாந்து, மெக்சிகோ, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், தாய்லாந்து, கனடா, ஜெர்மனி, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் குறிப்பிட்ட சதவீதம் பேர் செல்போன் மூலம் பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுபோல் ஆன்லைன் பணபரிவர்த்தனையை கட்டாயமாக்கினால் கருப்புப்பணம், லஞ்சம் முழுமையாக ஒழிக்கப்படும்.
இதனால் ரூ.5 ஆயிரம் அளவில் மட்டுமே நேரடி பணப்பரிவர்த்தனைக்கு அனுமதிக்க வேண்டும். ரூ.5 ஆயிரத்துக்கும் அதிக பணபரிவர்த்தனைகளை ஏடிஎம் கார்டு, டெபிட் கார்டு, நெட் பாங்க் மற்றும் பிற வங்கி கார்டுகள் மூலம் மேற்கொள்வதை கட்டாயமாக்க வேண்டும். இது தொடர்பாக மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் 16.12.2016ல் மனு அனுப்பினேன்.
இந்த மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே ரூ.5 ஆயிரத்துக்கும் அதிகமான பணபரிவர்த்தனைகளை ஏடிஎம் கார்டு, டெபிட் கார்டு, நெட் பாங்க் மற்றும் பிற வங்கி கார்டுகள் மூலம் மேற்கொள்வதை கட்டாயமாக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் ஏ.செல்வம், பி.கலையரசன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. பின்னர் இந்த மனுவுக்கு பிரதமர் அலுவலக முதன்மை செயலர், நிதித்துறை செயலர், பொருளாதார விவகாரத்துறை இயக்குனர், ரிசர்வ் வங்கி ஆளுனர், ரிசர்வ் வங்கி மண்டல இயக்குனர் ஆகியோர் பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், அடுத்த விசாரணையை பிப். 7ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.