

தேர்தல் ஆணைய அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் இடைத்தரகர் சுகேஷின் ஜாமீன் மனு மீது நாளை தீர்ப்பு வழங்கப்படுகிறது.
இரட்டை இலை சின்னத்தை பெறு வதற்காக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக அதிமுக அம்மா கட்சி துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜுனா, இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர், ஹவாலா தரகராக செயல்பட்ட நரேஷ் என்ற நாதுசிங், லலித் பாபு பாய் ஆகியோரை டெல்லி போலீஸார் கைது செய்தனர். இவர்கள் 5 பேரும் டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், டிடிவி தினகரன், மல்லிகார்ஜுனா ஆகியோருக்கு கடந்த 1-ம் தேதியும், நரேஷ், லலித் பாபு ஆகியோருக்கு 6-ம் தேதியும் டெல்லி மாவட்ட நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்த வழக்கில் முதலில் கைது செய்யப்பட்ட சுகேஷுக்கு மட்டுமே இதுவரை ஜாமீன் வழங்கப்படவில்லை. ஒருமுறை சுகேஷின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், கடந்த 5-ம் தேதி அவரது வழக்கறிஞர் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை நேற்று விசாரித்த டெல்லி மாவட்ட நீதிமன்ற நீதிபதி, ஜாமீன் மனு மீது 9-ம் தேதி (நாளை) தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.