

பொங்கலுக்கு அரசு விடுமுறையுடன் ஜல்லிக்கட்டும் நடத்திட அவசர சட்டம் பிறப்பித்திட வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''பொங்கல் விழாவிற்கு தமிழர்களின் பாரம்பரிய வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்த உச்ச நீதிமன்றமும், பீட்டா அமைப்பும் தடை விதித்துள்ள நிலையில், அந்த விழாவை எப்படியாவது முறையாக மத்திய, மாநில அரசுகள் அவசர சட்டம் இயற்றியாவது ஜல்லிக்கட்டு நடத்திட அனுமதிக்க வேண்டும் என்று ஒட்டு மொத்த தமிழர்களும் எதிர்பார்த்து தங்கள் ஆதங்கத்தை போராட்டங்கள் வாயிலாக அறவழியில் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தி கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் இன்று வந்த மத்திய அரசின் செய்தி தமிழர்கள் தலையில் பேரிடியாக அமைந்துள்ளது. மத்திய அரசு பொங்கல் தினத்தன்று விடுமுறையை ரத்து செய்துள்ளது, உரலுக்கு ஒருபுறம் இடி, மத்தளத்துக்கு இருபுறம் இடி என்பது போல் தமிழர்களின் கலாச்சார விழாவை கொச்சைப்படுத்தும் அறிவிப்பாக தமிழர்கள் கருதுகின்றனர்.
எனவே, பொங்கலுக்கு சில தினங்களே உள்ளதால் மத்திய அரசு உடனடியாக இந்தப் பிரச்சினையை, முக்கிய அறிவிப்பை மறு பரிசீலனை செய்து உடனடியாக விடுமுறை ரத்து என்ற அறிவிப்பை திரும்பப்பெற வேண்டும். அத்துடன் மாநில அரசு அமைச்சரவையை கூட்டி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி, பொங்கலுக்கு அரசு விடுமுறையுடன் ஜல்லிக்கட்டும் நடத்திட அவசர சட்டம் பிறப்பித்திட வேண்டும். வரப்போகும் தை பொங்கலை இனிய பொங்கலாக மாற்றி தமிழர்கள் அனைவருக்கும் பெருமையை சேர்த்திட வேண்டும்.
இந்த கருத்தை வலியுறுத்தி பிரதமருக்கும், தமிழக முதல்வருக்கும் கடிதம் எழுதி, தமிழர்களின் உணர்வுகளுக்காக கோரிக்கை வைத்துள்ளேன்'' என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.