

சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் தமீம் அன்சாரி என்ற சிறுவன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கு விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில்: தமீம் அன்சாரி என்னும் 15 வயது சிறுவனை சந்தேகத்தின் பெயரில் கடந்த 7-1-2014 அன்று பிடித்துச் சென்ற நீலாங்கரை காவல்நிலையத்தைச் சார்ந்த குற்றப்பிரிவு ஆய்வாளர் புஷ்பராஜ் குண்டுகள் நிரப்பப்பட்ட கைத்துப்பாக்கியைக் கொண்டு தனது அதிகாரத்தை வெளிப்படுத்தும் மிரட்டலை நடத்தியிருக்கிறார்.
துப்பாக்கி வெடித்து அவனைக் காயப்படுத்தியிருக்கிறது. கழுத்து, தோள்பட்டைப் பகுதிகளில் குண்டுகள் பாய்ந்ததில் நரம்புகளைச் சேதப்படுத்தியிருக்கிறது. உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
தமிழகத்தில் எத்தனை எத்தனையோ காவல்நிலையப் படுகொலைகள் நடந்தவாறுள்ளன. காவல்நிலையங்கள் என்றாலே வதைக்கூடாரங்கள் என்று எளியமக்கள் அஞ்சுமளவுக்கு அவை அமைந்துள்ளன.
தமிழக அரசு காவல்நிலையத்தின் மீதான இந்த மதிப்பீட்டை மாற்றுவதற்கும், பொதுமக்களின் நன்மதிப்பைப் பெறுவதற்கும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தமீம் அன்சாரியைத் துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளாக்கி உயிருக்குப் போராட வைத்துள்ள ஆய்வாளர் மீது அரசு கொலைமுயற்சி வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்யவேண்டுமெனவும், இவ்வழக்கை சிபிஐ விசாரணைக்குட்படுத்த வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.