

பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் செயல்பட்டு வந்த பொதுச்சேவை மையங்களை மூடி, பினாமி அதிமுக அரசு ஊழலை விரிவாக்கத் துடிக்கிறதா என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக திங்கட்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழகம் முழுவதும் செயல்பட்டு வந்த மின்னணு பொதுச் சேவை மையங்களில் கணிசமானவை மூடப்பட்டு விட்டன. மீதமுள்ளவையும் அடுத்த சில மாதங்களில் மூடப்படும் என்று அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் செயல்பட்டு வந்த பொதுச்சேவை மையங்களை மூடும் பினாமி அரசின் மக்கள் விரோத நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியதாகும்.
மக்களின் தேவைகளை நேரடியாக நிறைவேற்றும் அரசுத் துறைகளில் ஊழலை ஒழிப்பதற்கான முக்கியமான திட்டங்களில் முதன்மையானவை பொதுச்சேவை பெறும் உரிமை சட்டமும், பொதுச்சேவை மையங்களும் ஆகும். இந்த இரு விஷயங்களையும் விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், இரு ஆண்டுகளுக்கு முன் பொதுச்சேவை வழங்கும் மையங்களை முக்கிய இடங்களில் அப்போதைய முதலமைச்சர்
ஜெயலலிதா திறந்து வைத்தார். ஆனால் ஜெயலலிதா வழியில் நடப்பதாகக் கூறிக்கொள்ளும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான பினாமி அரசு, ஜெயலலிதாவால் திறக்கப்பட்ட பொதுச்சேவை மையங்களை படிப்படியாக மூடி வருகிறது.
பொதுச்சேவை மையங்கள் மூலமாக 60 வகையான சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வந்தன. சாதிச்சான்று, வருமானச் சான்று, முதல் பட்டதாரிச் சான்று, வாரிசுச் சான்று உள்ளிட்டவை பொதுச்சேவை மையங்களில் வழங்கப்படுவதால் கையூட்டு வழங்காமல் அவற்றைப் பெற முடிந்தது. இதனால் ஏழை, எளிய மக்களும், மாணவர்களும் தங்களுக்குத் தேவையான சான்றுகளை எளிதாக பெற முடிந்தது.
ஆனால் இப்போது இந்த சேவை மையங்கள் மூடப்பட்டு வருவதால் பொது மக்கள் இனி வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு சென்றுதான் சான்றிதழ்களை பெற முடியும் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. அத்தியாவசியச் சான்று பெற வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு செல்பவர்கள் தேவையில்லாமல் அலைக்கழிக்கப்படுகிறார்கள் என்பதால், அதைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காகத் தான் பொதுச்சேவை மையங்களை திறக்க வேண்டும் என்று பாமக வலியுறுத்தியது. அக்கோரிக்கை ஏற்கப்பட்டதால் மக்களும் பயனடைந்தனர்.
ஆனால், இப்போது பொதுச்சேவை மையங்களை மூடுவதற்காக அரசாங்கம் சொல்லும் காரணம், அம்மையங்களில் பணியாற்றும் ஒப்பந்தப் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க பணம் இல்லை என்பது தான். பொதுச்சேவை மையங்களில் பணியாற்றும் தற்காலிகப் பணியாளர்களுக்கு கடந்த 9 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. ஆனாலும், அதையும் தாங்கிக் கொண்டு பணியாற்றுவதற்கு தற்காலிகப் பணியாளர்கள் தயாராக இருந்தாலும், அவர்களை பணி செய்யவிடாமல் பொதுச்சேவை மையங்களை மூடும்படி அவர்களை வருவாய்த்துறை அதிகாரிகள் கட்டாயப்படுத்துவதாக குற்றச்சாற்றுகள் எழுந்துள்ளன. ஆனால் இதுகுறித்து தமிழக அரசிடமிருந்து இதுவரை எந்த விளக்கமும் வரவில்லை.
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம்தான் பொதுச்சேவை மையங்களை நடத்துகிறது. அரசுக்கு மட்டுமின்றி, ஆளுங்கட்சிக்கும் பணம் காய்க்கும் மரமாக திகழ்வது கேபிள் டிவி நிறுவனம் தான். அந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க பணம் இல்லை என்று கூறப்படுவதை ஏற்க முடியாது. பொதுச்சேவை மையங்களை மூடி வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் மக்களுக்கு சேவை வழங்கும் பிற அலுவலகங்களில் ஊழலை விரிவுபடுத்துவதற்காக தமிழக அரசு இவ்வாறு செய்கிறதோ என்ற சந்தேகம் மக்கள் மனதில் எழுவதை தவிர்க்க முடியவில்லை.
பொதுமக்களுக்கு சேவை வழங்கும் அரசு அலுவலகங்களில்தான் சிறிய அளவிலான கையூட்டு தொடங்குகிறது. அதைத் தடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் பொதுச்சேவை பெறும் உரிமைச் சட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று அனைத்துத் தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், தமிழக அரசோ அதை செய்யாமல் இருக்கும் வசதிகளையும் பறிப்பது எந்த வகையில் நியாயம்?
மக்களுக்குத் தேவையான அனைத்துச் சேவைகளையும் அவர்களின் இல்லத்திற்கே சென்று வழங்குவது மக்கள் நலன் காக்கும் அரசின் கடமை ஆகும். மக்களுக்கு வீடு தேடி சென்று சேவை வழங்காவிட்டாலும், குறைந்தபட்சம் வசதிகளையாவது பறிக்காமல் இருந்தால் நலம்.
தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் பொதுச்சேவை மையங்களை மேம்படுத்தி முழுவீச்சில் செயல்படச் செய்வதற்கு வகை செய்ய வேண்டும். அத்துடன் பொதுச்சேவை பெறும் சட்டத்தை மானியக் கோரிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக விரைவில் தொடங்கவிருக்கும் சட்டப்பேரவைக் கூட்டத்தில் அரசு நிறைவேற்ற வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.