

கடந்த 77 ஆண்டுகளுக்கு முன்பு அரிஜன மக்களை அழைத்துக் கொண்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆலய பிரவேசம் செய்த வைத்தியநாத ஐயரின் சமுதாயப் புரட்சி, வர லாற்று பாடப் புத்தகத்தில் இடம்பெற வேண்டும் என்று சென்னையில் நடந்த விழாவில் தக்கர் பாபா வித்யாலயா புரவலர் வி.கே.ஸ்தாணுநாதன் கேட்டுக் கொண்டார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அரிஜன ஆலய பிரவேச நினைவு நாள் நிகழ்ச்சி சென்னை தி.நகரில் உள்ள தக்கர் பாபா வித்யாலயாவில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில், தக்கர் பாபா வித்யாலயா செயலாளர் பி.மாருதி வரவேற்றார். தக்கர் பாபா வித்யாலயா தலைவர் எஸ்.பாண்டியன் தலைமை உரையாற்றினார்.
சிறப்பு அழைப்பாளராகக் கலந் துகொண்ட எழுத்தாளர் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது:
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா வில் நடைபெற்று வரும் பல வன்கொடுமைகளைப் பார்க்கும் போது, காந்தியத்தின் பாதையில் இருந்து நம் தேசம் நழுவிப் போய்க் கொண்டிருப்பதைக் காட்டுகிறது. அரசியல், சமூக, பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு காந்தியத்தில் மட்டுமே தீர்வு உள்ளது. அத்தனை பாடத் திட்டங்களிலும் முதல் வகுப்பில் இருந்து 10-ம் வகுப்பு வரை காந்தியத் தைப் பற்றிய பாடம் கட்டாயம் இடம் பெற வேண்டும். ஒவ்வொரு பள்ளியி லும் ஒருவாரத்தில் குறைந்தபட்சம் ஒருமணி நேரமாவது அறநெறி சார்ந்த வகுப்புகள் நடத்தப்பட வேண் டும். எல்.கே.ஜி.யில் இருந்து குழந் தைகளுக்கு வன்முறை இல்லாத வாழ்க்கை சாத்தியம் என்பதை சொல் லிக் கொடுக்க வேண்டும் என்றார்.
காந்தி கல்வி நிலைய தலைவர் கே.மோகன் பேசும்போது, “1939-ம் ஆண்டு ஜூலை 8-ம் தேதி பிரபல காந்தியவாதியான ஏ.வைத்தி யநாத ஐயர் துணிச்சலாக அரி ஜன மக்களை பழம்பெருமை வாய்ந்த மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வழிபாட்டுக்காக அழைத் துச் சென்றார். இச்செயலைப் பாராட்டி காந்தியடிகள் 1939,ஜூலை 22-ம் தேதியிட்ட ‘ஹரிஜன்’ என்ற இதழில் எழுதினார்”என்றார்.
தக்கர் பாபா வித்யாலயா புரவலரும் வைத்தியநாத ஐயரின் மருமகனுமான வி.கே.ஸ்தாணு நாதன் பேசியதாவது:-
இன்று எல்லோரும் கோயிலுக்குப் போய் தெய்வத்தை வழிபடுவதற்கான வாய்ப்பு கிடைத் திருக்கிறது என்றால் அதற்கு வைத்தியநாத ஐயர் செய்த ஆலய பிரவேசமே அடிப்படையாக அமைந்தது. அதன் பின்னர்தான், எல்லா இந்துக்களும் ஆலயங்களுக்குப் போகலாம் என்று சட்டசபையில் சட்டம் இயற்றப்பட்டது. வைத்தியநாத ஐயர் போன்றோரின் இத்தகைய மகத்தான செயல் வருங்கால சந்ததியினருக்குப் போய்ச் சேர வேண்டுமானால், வரலாறு, சமூகவியல் புத்தகத்தில் வரலாற்று நிகழ்வுகள் ஒரு பாடமாக இடம்பெற வேண்டும் என்றார்.
முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.ராஜேந்திரன், மாணவர்கள் ஆர்.ஆல்பிரட் ஜான், பரணி வித்யாகர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தக்கர் பாபா வித்யாலயா தொழிற் பயிற்சி மைய முதல்வர் என்.ஹரி ஹரன் நன்றி கூறினார்.