

மத்திய அரசின் மாட்டிறைச்சி தடை சட்டம் தொடர்பாக தமிழக முதல்வரின் விளக்கம் ஏற்புடையதாக இல்லை எனக் கூறி அதிமுக ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி ஆகியோர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
கால்நடை சந்தை கட்டுப்பாடு விவகாரத்தில் முதல்வரின் பதில் திருப்தி அளிக்கவில்லை எனக் கூறி வெளிநடப்பு செய்தனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் மூவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது, "கால்நடை சந்தை கட்டுப்பாடு சட்டத்திற்கு முதல்வர் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என தனியரசு எம்எல்ஏ கூறினார். சுதந்திர நாட்டில் ஒருவர் இதைத்தான் உண்ண வேண்டும் எனக் கூற யாருக்கும் அதிகாரமில்லை என கருணாஸ் எம்எல்ஏ தெரிவித்தார்.
மேலும் கால்நடை சந்தை கட்டுப்பாடு சட்டத்தை தமிழகத்தில் நிறைவேற்றக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
நேற்று (திங்கள்கிழமை) தமிழக சட்டப்பேரவையில் இருந்து அதிமுக எம்.எல்.ஏ., தங்கம் தமிழ்ச்செல்வன் வெளிநடப்பு செய்தார். அவர் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.
ஆனால், இன்று ஈபிஎஸ் அணி ஆதரவு எம்.எல்.ஏ.,க்களே அவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர். அண்மையில், தனியார் தொலைக்காட்சி வெளியிட்ட எம்.எல்.ஏ.,க்கள் பணபேரம் தொடர்பான வீடியோவில் அதிமுக எம்.எல்.ஏ., சரவணன் சிலரது பெயரைக் குறிப்பிட்டிருந்தார். தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி ஆகியோரது பெயரை அவர் சுட்டிக்காட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.