Published : 07 Mar 2014 05:44 PM
Last Updated : 07 Mar 2014 05:44 PM

இலங்கை அரசை பாதுக்காக்கவே அமெரிக்க தீர்மானம்: வைகோ குற்றச்சாட்டு

அமெரிக்கா 4 நாடுகள் ஐ.நா. முன்பு வைக்கும் தீர்மானம், இலங்கை அரசை பாதுகாக்க மறைமுக ஏற்பாடு என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "இவ்வாண்டின் பிற்பகுதியில் மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை, இலங்கையில் கள நிலைமையை ஆய்வு செய்து தந்த அறிக்கையில் சுதந்திரமான பன்னாட்டு நீதி விசாரணை நடைபெற்றால்தான் நீதிக்கு வழி கிடைக்கும் என அறிக்கை தந்தார். உலகத்தின் மனசாட்சி மெல்ல மெல்ல விழித்துக்கொண்டுவிட்டது என நாம் கருதினோம். யாழ்ப்பாணம் சென்ற இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் கூற்று அந்த நம்பிக்கையைச் சற்று வளர்த்தது.

இப்போது ஜெனீவாவில் மனித உரிமை கவுன்சில் கூட்டம் தொடங்கிவிட்டது. முருகதாசன் தீக்குளித்து மடிந்த ஜெனீவா திடலில் மார்ச் 10 ஆம் தேதி லட்சக்கணக்கான தமிழர்கள் சங்கமித்து நீதிகேட்டு எழுப்பும் சத்தியத்தின் ஆவேசக் குரல் மனித உரிமை கவுன்சிலின் செவிகளில் ஒலிக்கும். நீதிக்கான கதவு திறக்கும் என நம்பினோம்.

அமெரிக்கா, பிரித்தானியம், மாண்டிநிரோ, மாசிடோனியா, மொரீசியஸ் ஆகிய ஐந்து நாடுகள் மனித உரிமை கவுன்சிலில் மார்ச் 3 ஆம் தேதி ஒரு தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளன. அமெரிக்க அரசு முன்நின்று தயாரித்துள்ள இத்தீர்மானம் மிகவும் வஞ்சகமானது. வரிக்கு வரி திரும்பத் திரும்பப் படித்து அதிர்ச்சியுற்றேன்.

சிங்கள அரசுக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டுவந்துவிட்டதாகவும், ஆனாலும் அதை அலட்சியப்படுத்துகிறோம் என்று சிங்கள அரசு கூறுவதும், தமிழர்களுக்கான நீதியை நிரந்தரமாகக் குழிதோண்டிப் புதைக்க திரைமறைவு சதி வேலையாகவே தெரிகிறது.

பயங்கரவாதத்தை எதிர்கொள்ள மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் என்ற சொற்களின் பின்னால் கொடூரமான சிங்கள அரச பயங்கரவாதத்தை மறைத்துவிட்டு, தாயக விடுதலைக்காக உலகெங்கும் பல தேசிய இனங்கள் ஆயுதம் ஏந்திய வழியில் சமர்க்களத்தில் போராடிய விடுதலைப் புலிகள் மீது பழி சுமத்தும் நோக்கம் நன்கு தெரிகிறது.

2020 ஆம் ஆண்டில் சிங்கள தேசத்தில் வேறு இனம் என்ற அடையாளமோ, பேச்சோ இருக்கக்கூடாது என்று ராஜபக்சே சகோதரர்கள் ஊளையிட்ட கருத்தை ஏற்றுக்கொள்ளும் விதத்தில் இத்தீர்மானத்தில் தொடக்கத்தில் ஒரு இடத்தில் இனம் (Ethnicity) என்ற சொல்லைத் தவிர்த்து தீர்மானம் நெடிகிலும் தமிழ் தேசிய இனம் என்பது முற்றாகத் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறித்துவர்கள் போன்ற சிறுபான்மை மக்கள் என்றே கூறப்பட்டுள்ளது. இதில் திட்டமிட்ட உள்நோக்கம் தெரிகிறது.

கொலைகார சிங்கள அரசு நியமித்த எல்.எல்.ஆர்.சி. எனும் மோசடி பித்தலாட்ட ஆணையத்தை பல இடங்களில் இத்தீர்மானம் பாராட்டுகிறது. இலங்கையில் நல்லிணக்கத்துக்கான ஆக்கபூர்வமான வேலைகளை ஆணையம் செய்துவிட்டதாக மெச்சவும் செய்கிறது. இந்த ஆணையத்தின் சில பரிந்துரைகளை இன்னும் அரசு நிறைவேற்றவில்லை என்று குறிப்பிட்டு, மேல் பூச்சு ஏமாற்று வேலையை தீர்மானம் செய்கிறது.

உண்மையைக் கண்டறிந்து நீதியை நிலைநாட்ட என்று கூறிக் கொண்டு சிங்கள அரசு அமைத்த ஏற்பாடுகள் அனைத்தும் முழுமையாக தோல்வியடைந்து விட்டதால், சுதந்திரமான நம்பகத் தகுந்த சர்வதேச விசாரணை வேண்டும் என்று மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை தந்த அறிக்கையை ஒரு பக்கத்தில் கூறிக்கொண்டே, இலங்கை சிங்கள அரசே அப்படி ஒரு விசாரணையை நடத்த வேண்டும் என்றும், அதில் நீதி கிடைக்காவிடில் அனைத்து நாடுகள் விசாரணை குறித்த நவநீதம்பிள்ளை பரிந்துரையை வரவேற்பதாகவும் முன்னுக்குப் பின் முரணாக இத்தீர்மானம் கூறுகிறது.

ஜெர்மனியின் பிரையன் நகரில் கூடிய மக்கள் தீர்ப்பாயம் 2013 டிசம்பர் 10 இல் அறிவித்த தீர்ப்பில் இலங்கையில் நடந்தது தமிழ் இனப்படுகொலைதான் என்றும், அக்கொடுமை 2009 மே மாதத்திற்குப் பின்னரும் இன்னமும் தொடர்கிறது என்று அறிவித்தது.

இலங்கையில் தமிழர் தாயகத்தில் தற்போது வேகமாக சிங்களக் குடியேற்றங்கள் நடக்கின்றன. தமிழ் ஈழம் சிங்கள இராணுவத்தின் பிடியில் நசுங்குண்டு விம்முகிறது. தமிழ் பெண்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ள விபரீத நிலைமையை நினைக்கவே மனம் நடுங்குகிறது. ஈழத்தமிழருக்கு நீதியும் தீர்வும் ஒன்றே ஒன்றுதான். நடைபெற்ற இனக்கொலை குறித்து சுதந்திரமான பன்னாட்டு நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும், சிங்களக் குடியேற்றங்களும் சிங்கள இராணுவமும் தமிழர் தாயகத்திலிருந்து முற்றாக வெளியேற்றப்பட்டு ஒரு இடைக்கால நிர்வாகத்தை ஐ.நா.மன்றம் ஏற்பாடு செய்ய வேண்டும்.

சுதந்திரத் தமிழ் ஈழத்துக்கான பொதுவாக்கெடுப்பு வடக்கு கிழக்கு மாகாணங்களிலும் நடத்தப்பட வேண்டும். 2011 ஜூன் 1 ஆம் தேதி பிரஸ்ஸல்சில் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற அரங்கத்தில் நான் அறிவித்தவாறு அந்த பொது வாக்கெடுப்பு உலகின் பல நாடுகளில் வாழும் புலம்பெயர் ஈழத் தமிழர்கள் மத்தியிலும் நடத்தப்பட வேண்டும். இவை மட்டும்தான் ஈழத் தமிழர் தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வாக அமையும். இனக்கொலை குற்றவாளிகளுக்கு தண்டனையும், ஈழத் தமிழர்களுக்கு நீதியும் கிடைக்க வழி அமைக்கும்.

உக்ரைன் நாட்டின் கிரிமியா பகுதியில் ரஷ்ய மொழி பேசும் மக்கள் வாழ்கிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக ரஷ்யாவின் இராணுவத்தை செலுத்துவேன், கிரிமியா ரஷ்யாவோடு இணைய பொது வாக்கெடுப்பு கோருவேன் என முண்டா தட்டும் ரஷ்யா ஐ.நா.வின் பாதுகாப்புக்குழு உறுப்பினர் நாடு. இங்கிலாந்து நாட்டில் அனைத்து உரிமைகளோடும் வாழும் ஸ்காட்லாந்து மக்கள் தனிநாடாகப் போவதற்கு இதோ பொது வாக்கெடுப்பு நடக்கப் போகிறது.

உலகில் தமிழனுக்கு மட்டும் ஏன் நீதியில்லை. நாதியற்றுப்போனோமா நாங்கள்? என தரணி வாழ் தமிழின மக்கள் சாதி, மதம், கட்சி எல்லை கடந்து தமிழர்களின் பிறவிக்குணங்களில் ஒன்றான வேற்றுமையை மறந்து மறுக்கப்பட்ட நீதியைப் பெறவும், தரணியில் தமிழருக்கு ஈழ தேசம் மலரவும் வெகுண்டு எழவேண்டிய கடமையைச் செய்ய சபதம் ஏற்போம்.

ஜெனீவா மனித உரிமை கவுன்சிலில் அங்கம் வகிக்கும் நாடுகளின் அரசுகள் ஈழத் தமிழர்களுக்கு வஞ்சகம் செய்யாமல், சுதந்திரமான பன்னாட்டு நீதி விசாரணைக்கு ஏற்பாடு செய்யவும், சுதந்திரத் தமிழ் ஈழக் கோரிக்கையை அங்கீகரிக்கவும் ஆன விதத்தில் மனித உரிமை கவுன்சிலில் தீர்மானம் கொண்டுவர வேண்டும்.

அமுதம் தடவிய நஞ்சாக தாக்கல் செய்யப்பட்டுள்ள அமெரிக்க தீர்மானத்தின் ஊடாக புதைந்துள்ள நச்சுத் தன்மையை நீக்கி நீதிக்கான தீர்மானத்தை நிறைவேற்றவும் மனித உரிமை கவுன்சிலின் உறுப்பினர் நாடுகள் முன்வரவேண்டும். அதற்கான அறப்போர் குரலை ஓங்கி எழுப்புவோம். கரிய இரவு நீடித்துக்கொண்டே போக முடியாது. விடியல் என்பது நியதி. அதுபோலவே, ஈழத் தமிழர்களுக்கும் நீதியைப் பெற்றுத் தரும்வரை உறுதிகொண்டு தொடர்ந்து போராட தமிழ்க் குலத்தின் இளைய தலைமுறையை அன்புடன் வேண்டுகிறேன்" என்று வைகோ கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x