ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மீண்டும் தாக்குதல்

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மீண்டும் தாக்குதல்
Updated on
1 min read

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 600-க்கும் மேற்பட்ட விசைப்படகு களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் புதன்கிழமை கடலுக்குச் சென்றனர்.

அன்று இரவு கச்சத்தீவு அருகே பத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது சிறிய ரக கப்பல்களில் இலங்கை கடற்படையினர் ரோந்து வந்தனர்.

அவர்கள் ராமேஸ்வரம் மீனவர்களிடம், இது இலங்கை கடற்பகுதி. இங்கு மீன்பிடிக்கக் கூடாது என எச்சரிக்கை விடுத்ததோடு, மீனவர்களின் வலைகளை அறுத்து கடலுக்குள் வீசினர். மேலும் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கற்கள், சோடா பாட்டில்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

இதனால் மீனவர்கள் உயிருக்குப் பயந்து கரை திரும்பினர். இது குறித்து ராமேஸ்வரம் மீனவர் சங்கத் தலைவர் தேவதாஸ் கூறியதாவது: இருநாட்டு மீனவர்கள் பேச்சுவார்த்தை ஜன. 27-ம் தேதி நடைபெற உள்ளது. இந் நிலையில், ராமேஸ்வரம், மண்டபம் மீனவர்கள் 25 பேரை இலங்கை சிறைபிடித்தது மீனவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ராமேஸ்வரம் மீனவர்கள் மீதும் இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதை மீனவர்கள் சங்கம் சார்பில் கண்டிக்கிறோம்.

மேலும் சிறைபிடித்த மீனவர்களை படகுகளுடன் சேர்த்து விடுதலை செய்ய வலியுறுத்தி ஜன.24-ம் தேதி முதல் ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம் என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in