

தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களில் 90 சதவீத வேலைவாய்ப்பை தமிழர்களுக்கு வழங்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி வரும் 12-ம் தேதி திருச்சியில் போராட்டம் நடத்த உள்ளதாக தமிழ் தேசிய பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் தெரிவித்தார்.
தமிழ் தேசிய பேரியக்க நிர் வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் நேற்று நடைபெற்றது. அப்போது பெ.மணியரசன் அளித்த பேட்டி:
தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்களே அதிகமாக பணியில் சேர்க்கப்படு கின்றனர். குறிப்பாக ரயில்வே துறையில் இச்செயல் அதிகம் உள்ளது. திருச்சி பெல் நிறுவனத் தில் உள்ள மொத்தத் தொழி லாளர்களின் எண்ணிக்கையில் 40 சதவீதத்தினரும், அதிகாரிகளில் 70 சதவீதத்தினரும் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.
அதேபோல திருச்சி, ஆவடி, அரவங்காடு பகுதிகளில் உள்ள ராணுவத் தொழிற்சாலைகள், மத்திய அரசின் வருமானவரித் துறை, உற்பத்தி வரி அலுவலகம், சுங்கத் துறை, கணக்காயர் அலு வலகம், சென்னை சாஸ்திரி பவன் ஆகியவற்றில் அண்மைக் காலமாக பணியமர்த்தப்பட்ட வர்களில் 70 சதவீதம் பேர் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர் கள். தமிழகத்துக்கான பணியிடங் களில், பிற மாநிலத்தவரை மத்திய அரசு திட்டமிட்டு புகுத்தி வருகிறது.
தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 92 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து வேலைக்காக ஆண்டுக் கணக்கில் காத்திருக்கின்றனர். ஒருகாலத்தில் கர்நாடக மாநிலத் திலும் இதேபோன்ற நிலை இருந்தது. இதனால் அம்மாநில மக்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க 1986-ம் ஆண்டு சரோஜினி மகிசி குழு சில பரிந்துரைகளை தெரிவித்தது. அதை அந்த மாநில அரசும் ஏற்றுக்கொண்டு அங்கு மத்திய அரசு, தனியார் நிறுவனங் களில் கன்னட மக்களுக்கு அதிக பட்சமாக 90 சதவீதம் வரை வேலை வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
எனவே, தமிழகத்திலும் அது போன்றே வேலைவாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 12-ம் தேதி தமிழ் தேசிய பேரியக்கம் சார்பில் திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளோம். இதில் அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் பங்கேற்க உள்ளனர் என்றார்.