Published : 07 Mar 2017 12:12 PM
Last Updated : 07 Mar 2017 12:12 PM

மதுரையில் காணாமல்போகும் குளங்கள், கண்மாய்கள்: ‘0’ அடி ஆழத்தில் கிடைத்த இடத்தில் 600 அடிக்கு சென்ற தண்ணீர்

வைகை ஆறும், அதனைச் சுற்றி அமைந்துள்ள கண்மாய்களும், குளங்களும்தான் மதுரையின் நீர் ஆதாரங்கள். வைகையில் தண்ணீர் வரும்போதும், மழை பெய்து, கண்மாய், குளங்களில் நீர் தேங்கும்போதும் மட்டுமே மதுரையின் நிலத்தடி நீர் ஆதாரம் உயர்கிறது. மற்ற இடைப்பட்ட காலங்களில் விவசாய பாசன த்துக்கும், குடிநீருக்கும் மக்கள் தவிக்கும் நிலைதான் ஏற்படுகிறது.

மதுரையின் நகரப் பகுதியில் விளாங்குடி, கரிசல்குளம், தத்தநேரி, செல்லூர், வில்லாபுரம், அவனியாபுரம், வண்டியூர், மாடக்குளம், சொக்கிகுளம், பீபிகுளம், தல்லாகுளம் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கண்மாய்கள், குளங்கள் இருந்துள்ளன. இந்த கண்மாய்களும், குளங்களும்தான் வைகை ஆற்றுடன் சேர்ந்து மதுரையை வளப்படுத்தின. இதில் வில்லாபுரம் கண்மாய், சொக்கிகுளம், பீபி குளம், தல்லாகுளம் உள்ளிட்ட பல கண்மாய், குளங்கள் நகர் விரிவாக்கத்துக்கு இரையாகி குடியிருப்பு பகுதிகளின் பெயர்களாக மாறிவிட்டன.

இந்த கண்மாய்கள் வரிசையில் மாடக்குளம், வண்டியூர் உள்ளிட்ட எஞ்சியுள்ள கண்மாய்களும் ஆக்கிரமிப்பாலும், பராமரிப்பு இல்லாமல் சுருங்கி வருகின்றன. இருக்கிற இந்த கண்மாய்களையும் காப்பாற்றாவிட்டால் மதுரையில் நீர் நிலைகளே இல்லாத நிலையும், வணிகரீதியான கான்கிரீட் கட்டிடங்கள் மட்டுமே இருக்கும் அபாயமும் உருவாகும்.

மதுரை புதுவிளாங்குடியை சேர்ந்த சமூக ஆர்வலர் ரவிச்சந்திரன் கூறியதாவது:

மாடக்குளம் கண்மாயின் விவசாய பாசன பரப்பு சுமார் 4000 ஏக்கர்களுக்கும் மேலாக இருந்தது. தற்போது 200 ஏக்கருக்கும் கீழாக உள்ளது. இந்த 200 ஏக்கரும் விரைவில் வீட்டடி மனைகளாக மாறுவதற்கு காத்திருக்கின்றன. சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் விவசாயம் நடைபெற்ற போது பசும்பொன் நகரில் வீட்டு கிணறுகளில் ‘0’ அடி ஆழத்தில் (கிணறு நிரம்பிய நிலை) தண்ணீர் எடுத்து குளித்த அனுபவம் எனக்கு இருக்கிறது. தற்போது பசும்பொன் நகரில் நிலத்தடிநீர் 600 அடிக்கும் கீழாக போய்விட்டது.

இதனால், இப்பகுதி 100 வீடுகளில் குடியிருந்தோர் தண்ணீர் பற்றாக்குறையால் வீட்டை காலி செய்துவிட்டதால் அந்த வீடுகள் பல மாதங்களாக பூட்டிக்கிடக்கின்றன. வளமான நீர்த்தேக்கம் அருகேயே தண்ணீர் தட்டுப்பாடு இருப்பதால் மக்கள் நெருக்கம் நிறைந்த மதுரை மையப் பகுதியில் 650 அடி முதல் 100 அடிக்கு அதிகமாக நிலத்தடி நீர் சென்றுவிட்டது.

ஒரு ஆண்டில் மிதமிஞ்சிய மழை பெய்தால் அந்த ஆண்டில் உபயோகத்துக்கு போக எஞ்சியதை ஒரு சொட்டு நீர்கூட கடலுக்கு போகாத வண்ணம் நிலத்தடி நீராக மாற்ற வேண்டும். அதற்கு மழைகாலத்தில் ஒவ்வொரு நகரத்தின் விரிவாக்கப் பகுதியில் அமைந்துள்ள விவசாயத்துக்கு போக பயன்படாத கண்மாய்களின் நீரை, நிலத்தடி நீராக மாற்ற வீடுகளில் அமைக்கப்படும் மழைநீர் சேமிப்பு அமைப்பை போல் நீர் செறிவூட்டும் அமைப்புகளை கண்மாய்கள், குளங்களிலும் அரசே அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


ரவிச்சந்திரன்.

நீர் செறிவூட்டும் அமைப்பு எப்படி அமைப்பது?

இதுகுறித்து வேளாண் பொறியாளர் பிரிட்டோராஜ் கூறியது: குளங்கள், கண்மாய்கள் அவற்றை சுற்றியுள்ள 1 கி.மீ. நிலப்பரப்பில் அமைந்துள்ள கிணறு, ஆழ்துளை கிணறுகளுக்குநீர் செறிவூட்டும் வகையில் வெளிப்புறமாக இருக்கும் அமைப்புகளாகும். குறைவான மழையளவும் மூடப்பட்ட நிலத்தடி நீர் துளைகள் உள்ள பகுதிகளில் பூமிக்கடியில் விரைவாக நீர் செறிவூட்டும் வகையில் 120 முதல் 180 அடி வரையிலான 8 இன்ச் விட்டமுள்ள ஆழ்துளை கிணறு அமைக்க வேண்டும்.

அதனுள் துளையிடப்பட்ட பிவிசி கேசிங் பைப்பை பாறை தொடும் அளவுக்கு தரையினுள் இறக்கி, மேற்பரப்பில் 4 அடி நீளம், 4 அடி அகலம், 4 அடி ஆழமுள்ள குழி அமைத்து, அக்குழிக்குள் 40 மி.மீ, அளவுள்ள ஜல்லிக் கற்கள் 2 அடிக்கும், 20 மி.மீ. அளவுள்ள ஜல்லிக்கற்கள் ஒன்றரை அடிக்கும் நிரப்ப வேண்டும். பொதுவாக ஒரு குளத்தில் முழுகொள்ளளவு உள்ள தூரத்துக்கு சற்று உட்புறமாக இந்த அமைப்பை அமைக்க வேண்டும். இதனால், குளத்தில் நிரம்பும் நீர், ஆழ்துளை கிணறு வழியாக நேரடியாக நீர் தாங்கிகளை சென்றடையும். இதனால், எளிதாக சுற்றுப்புறத்தில் உள்ள கிணறு, ஆழ்துளை கிணறுகளுக்கு நீர் ஆதாரம் கிடைக்கும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x