

சுவாதி கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள ராம்குமாரை, இந்த வழக்கில் கைப்பற்றப்பட்ட வீடியோ ஆதாரங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க எழும்பூர் நீதிமன்றம் ஒரு நாள் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதி கொலை செய்யப்பட்டது தொடர்பாக, ராம்குமார் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளார். அவரை போலீஸார் ஏற்கெனவே 3 நாட்கள் தங்கள் காவலில் வைத்து விசாரித்தார்கள்.
இந்நிலையில் சம்பவம் நடந்தபோது கைப்பற்றப்பட்ட வீடியோ ஆதாரங்களுடன் ராம்குமாரை ஒப்பிட்டுப் பார்க்கவும், சூளைமேடு ஏஎஸ் மேன்சனில் தங்கியிருந்தபோது ஏற்கெனவே ராம்குமார் கையெழுத்திட்டுக் கொடுத்த ஆவணங்களுடன், அவரது தற்போதைய கையெழுத்தை ஒப்பிட்டுப் பார்க்கவும் நீதிமன்ற அனுமதி வேண்டி அரசு உதவி வழக்கறிஞர் கொளஞ்சிநாதன் எழும்பூர் 14-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான இருதரப்பு விசாரணை ஏற்கெனவே நடந்து முடிந்த நிலையில், நேற்று குற்றவியல் நடுவர் கோபிநாதன், இந்த வழக்கில் கைப்பற்றப்பட்டுள்ள வீடியோ ஆதாரங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க ராம்குமாரை வரும் ஆகஸ்டு 8-ம் தேதியன்று நீதிமன்ற உத்தரவுப்படி போலீஸார் தங்களது பொறுப்பில் எடுத்து வீடியோ எடுக்க அனுமதியளித்து உத்தரவிட்டார்.
மேலும் இந்த உத்தரவு தொடர்பாக ராம்குமார் தரப்பு வரும் ஆகஸ்டd 8-ம் தேதிக்குள் மேல்முறையீடு செய்துகொள்ளலாம் எனவும் அனுமதியளித்தார்.