

இலங்கை இனப்படுகொலைக்கு இந்தியா துணை போகவில்லை என்பதை நிரூபிக்கவும், ஈழத்தமிழர் நலனை பாதுகாக்கவும் மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: இலங்கைப் போர் குறித்து ஜெர்மனியில் விசாரணை நடத்திய நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் நேற்று அளித்த தீர்ப்பில், இலங்கையில் நடைபெற்றது திட்டமிட்ட இனப்படுகொலை என்று அறிவித்திருக்கிறது.
இந்த இன அழிப்புக்கு அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் துணையாக இருந்ததாகவும் தீர்ப்பாயம் கூறியுள்ளது. இதில் இந்தியாவிற்கு உள்ள பங்கு குறித்த ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகவும், அவற்றை ஆய்வு செய்து பின்னர் தீர்ப்பளிப்பதாகவும் நிரந்த மக்கள் தீர்ப்பாயம் தெரிவித்திருக்கிறது.
இலங்கை இனப்படுகொலை தொடர்பான சந்தேக நிழல் இந்தியா மீதும் படிந்துள்ள நிலையில், இனப் படுகொலை குற்றவாளிகளுக்கு தன்டனை பெற்றுத்தருவதன் மூலம் தான் தன் மீதான சந்தேகநிழலை மத்திய அரசு போக்க முடியும். எனவே, இனப்படுகொலைக்கு துணை போகவில்லை என்பதை நிரூபிக்கவும், ஈழத்தமிழர் நலனை பாதுகாக்கவும் மூன்று நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.
ஜெனிவாவில் வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில், இலங்கைக்கு எதிராக இனப்படுகொலை விசாரணை நடத்துவதற்கான தீர்மானத்தை இந்தியா கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும்.
தேசிய இனமாக அறிவிக்கப்பட்டுள்ள ஈழத் தமிழினம் தங்களுக்கென தமிழீழம் என்ற புதிய நாட்டை உருவாக்குவதற்காக நடவடிக்கைகளை ஐக்கிய நாடுகள் அமைப்பின் மூலம் மேற்கொள்ள வேண்டும்.
தீர்ப்பாயம் பரிந்துரைத்திருப்பதைப் போல ஈழத் தமிழர்கள் கொத்துக்கொத்தாக படுகொலை செய்யப்பட்ட மே 18 ஆம் நாளை முள்ளிவாய்க்கால் நினைவு நாள் & சர்வதேச இனப்படுகொலைக்கு எதிரான நாள் என்று ஐ.நா. மூலம் அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.