

உலக நீர் தினத்தையொட்டி, திருநெல்வேலி டவுன் நயினார் குளத்தை தூய்மைப்படுத்தும் பணியில், பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாண வர்கள் நாளை ஈடுபட உள்ளனர்.
திருநெல்வேலி மற்றும் தூத்துக் குடி மாவட்டங்கள், வறண்ட பகுதி களை அதிகம் கொண்டுள்ளன. மேற்கு தொடர்ச்சி மலையின் தென்பகுதியான அகத்தியமலை, இம்மாவட்டங்களின் மேற்கு எல்லையில் உள்ளதால் மழை மறைவு பகுதியாக உள்ளது. இங்கு சமவெளிகளில் வருடத் துக்கு 700 முதல் 1,000 மி.மீ. வரை மழை பெறப்படுகிறது. இதில் பெரும்பகுதி வடகிழக்கு பருவமழைக் காலமான அக்டோபர் முதல் டிசம்பர் மாதங்களில் கிடைக்கிறது.
வற்றாத நதிகள்
இருந்தபோதிலும், அடர்ந்த காடுகளைக் கொண்ட மலைப் பகுதி, பருவ மழைக்காலங்களில் மிகுதியான மழையைப் பெற்று ராம நதி, கடனா நதி, தாமிரபரணி, மணிமுத்தாறு, பச்சையாறு, நம்பியாறு மற்றும் சிற்றாறு ஆகிய ஆறுகளை வளம் பெறச் செய்கிறது. பாபநாசம் தொடங்கி ஸ்ரீவைகுண்டம் வரை 8 தடுப்பணைகள் தாமிரபரணி நதியில் கட்டப்பட்டுள்ளன. இதில் 7 தடுப்பணைகள் மன்னர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டவை. இவை அனைத்தும் கால்வாய்கள் மூலம் பாசனக் குளங்களுடன் இணைக்கப்பட்டு விவசாயத்துக்கு உதவுகின்றன.
1,387 குளங்கள்
தாமிரபரணி உப வடிநில கோட்டத்தில் 786 முறைப்படுத்தப் பட்ட பாசனக் குளங்கள், 601 முறைப்படுத்தப்படாத பாசனக் குளங்கள் என, மொத்தம் 1,387 குளங்கள் உள்ளன. இவை மூலம் 1,30, 000 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. எண்ணற்ற நீர்வாழ் உயிரினங்களுக்கும் இந்நீர்நிலைகள் ஆதாரமாக விளங்கி வருகின்றன.
சூழலுக்கு பேராபத்து
ஆனால், இன்றைய கால கட்டத்தில் குளங்களின் முக்கி யத்துவம் கருதாமல், அவற்றில் கழிவுகளைக் கொட்டுகின்றனர். குளங்களை ஆக்கிரமித்து கட்டிடங்கள் எழுப்புகின்றனர். சாக் கடைகளை குளங்களில் கலக்கச் செய்து குப்பைத் தொட்டிகளாக பயன்படுத்தி வருகின்றனர்.
குளங்களை மாசுபடுத்துவதால், நீர்ப்பிடிப்பு திறன், நீரின் தரம், நிலத்தடி நீர் மறு உற்பத்தி ஆகியவை வெகுவாக பாதிக் கின்றன. மேலும் நீரில் வாழக் கூடிய இயற்கையான தாவரங்கள் மறைந்து ஆகாயத் தாமரை, ஐப்போமியா, சீமைக் கருவேலம் போன்ற தாவரங்கள் ஆக்கிரமித்து, நீர் சூழலுக்கு பேராபத்தை விளைவிக்கின்றன.
களமிறங்கும் மாணவர்கள்
திருநெல்வேலி டவுன் நயினார்குளத்தை தூய்மைப் படுத்தும் பணியில் நாளை மாணவர்கள் ஈடுபடுகின்றனர். இத்திட்ட ஒருங்கிணைப்பாளர் மு.மதிவாணன் கூறியதாவது:
உலக நீர் தினத்தை முன்னிட்டு, தாமிரபரணி பாசனக் குளங்களை அழிவிலிருந்து மீட்டெடுக்கும் முயற்சியாக, திருநெல்வேலி டவுன் நயினார்குளத்தை தூய்மைப் படுத்தும் பணியை மணிமுத்தாறு அகத்தியமலை இயற்கைவள காப்பு மையம், நெல்லை இயற்கை சங்கம், ரோட்டரி சங்கம் இணைந்து மேற்கொள்ள உள்ளன.
இப்பணியில் ம.தி.தா. இந்து கல்லூரி, தூய யோவான் கல்லூரி, சதக்கத்துல்லா கல்லூரி மற்றும் ஏ.கே.ஒய். பாலிடெக்னிக் கல்லூரியை சேர்ந்த நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் 200 பேர் ஈடுபட உள்ளனர். பொது மக்களும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளலாம். தூய்மைப்படுத்தும் பணி நாளை காலை 8 மணிக்கு தொடங்கி பகல் 12 மணி வரை நடைபெறும் என்றார் அவர்.