Last Updated : 27 Aug, 2016 12:49 PM

 

Published : 27 Aug 2016 12:49 PM
Last Updated : 27 Aug 2016 12:49 PM

அட்டப்பாடி பகுதியில் சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் முயற்சி: கேரளத்துக்கு தமிழகத்திலிருந்து கிளம்பும் எதிர்ப்புகள்

கேரள மாநிலம் அட்டப்பாடி பகுதியில் உள்ள சிறுவாணி ஆற்றின் குறுக்கே பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அணை கட்ட திட்டமிடப்பட்டது. மக்கள் பல முறை போராட்டங்கள் நடத்தி, தடுத்து நிறுத்தப்பட்டது. தற்போது அதே பகுதியில் அணைகட்டும் முயற்சி மேற்கொள்ளப்படுவதால், மீண்டும் தமிழக பகுதி விவசாயிகளிடம் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

கோவை மண்டலத்தின் முக்கிய நீர் ஆதாரமாக இருப்பது பவானி நதியின் கிளை நதி சிறுவாணி. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உருவாகும் இந்த ஆறு, கேரள மாநிலம் அட்டப்பாடி வனப்பகுதி வழியாகப் பயணித்து தமிழகப் பகுதியில் கூடுதுறை என்ற இடத்தில் பவானி ஆற்றில் கலக்கிறது.

இந்நிலையில், கேரள பகுதி வழியாக சிறுவாணி ஆறு செல்லும் இடத்தில் அட்டப்பாடி அகழிக்கு அப்பால் சித்தூர் பகுதியில் அணை கட்ட சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு கேரள அரசு முடிவு செய்தது. கேரளத்தில் குறிப்பிட்ட பகுதி மக்களின் பிரச்சினை, தமிழக எல்லையில் உள்ள விவசாயிகள் பிரச்சினை மற்றும் இதில் நடந்த முறைகேடுகளால் நில எடுப்புடன் அப்போது இப்பணி நின்றுபோனது.

இதன் தொடர்ச்சியாக, பவானி யில் 2002-ம் ஆண்டில் அணை கட்ட கேரள அரசு திட்டமிட்டது. தமிழகத்தில் விவசாயிகள் மற்றும் அரசியல் அமைப்புகள் எதிர்த்ததால் நிறுத்தப்பட்டது.

முக்காலி அணைக்கு கிடைத்த நெருக்கடியால், சித்தூர் அணையை மீண்டும் தூசி தட்டியது. அப்போது மத்தியில் பாஜக ஆட்சி, கடும் எதிர்ப்பு தெரிவித்தது. எனவே அணை கட்டும் திட்டம் நிறுத்தப்பட்டது. கடந்த 2012-ம் ஆண்டில் மீண்டும் இத்திட்டத்தை தொடங்கியது. அப்போதைய காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா முன்னிலையில் ஆலோசனைகள் நடக்க, தமிழகம் முழுக்க எதிர்ப்பு கிளம்பியது. இங்கு அணை கட்டப்பட்டால் சிறுவாணியிலிருந்து பவானிக்கு வரும் தண்ணீர் வராது. அதனால் பவானியே பாலைவனமாகும் என்றெல்லாம் கோஷங்கள் எழுந்தன.

அப்போதைக்கு இந்த திட்டம் நீறுபூத்த நெருப்பாக முடக்கப்பட்டிருந்தது. என்றாலும், இது தொடர்பான கோப்புகள் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்குச் சென்றுள்ளன. அந்த வகையில், கேரள அரசின் குடிநீர் வடிகால் வாரியம், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகங்கள் சார்பில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் தமிழக அரசுக்கு பல்வேறு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. ஆனால், கேரள அரசு அனுப்பிய கடிதங்களுக்கு தமிழக அரசு முறையான பதில் அளிக்கவில்லை. எனவே இந்த விஷயத்தை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் மத்திய நதிநீர் மதிப்பீட்டு நிபுணர்கள் குழுவுக்கு முறைப்படி தெரிவித்துவிட்டு அணை கட்டுமானப் பணிகளை தொடங்க கேரள அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்துதான் மறுபடியும் தமிழகத்தில் குறிப்பாக கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்ட விவசாயிகளிடம் எதிர்ப்புக் குரல்கள் கிளம்பியுள்ளன.

திமுக தலைவர் கருணாநிதியும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருப்பதோடு, தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு கொங்குமண்டலத்துக்கு நிகழ இருக்கும் ஆபத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

பழிவாங்கவே திட்டம்

இதற்காக தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடத்தி வந்தவரும், தற்போதும் இப்போராட்டக் களத்தில் உள்ளவருமான மதிமுக இளைஞரணி மாநிலச் செயலாளர் ஈஸ்வரன் கூறியதாவது:

அணை கட்டும் திட்டம் குறித்து கேரள நீர்ப்பாசனத் துறை, பொதுப்பணித் துறையினர் தமிழக அரசுக்கு எழுதிய கடிதங்களுக்கு பதில் தரவில்லை என்ற காரணத்தை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கும், நதிநீர் மதிப்பீட்டு நிபுணர் குழுவுக்கும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அதையடுத்தே நதிநீர் மதிப்பீட்டு நிபுணர் குழு கேரளத்துக்கு அணை கட்டும் ஆயத்தப் பணிகளை மேற்கொள்ள அனுமதித்துவிட்டதாக தெரிகிறது. எனவேதான் அணைகட்டும் பணியை தூசி தட்டத் தொடங்கியுள்ளது கேரள அரசு.

சிறுவாணி அணையை தடுத்து, தண்ணீரை எடுத்துதான் பாசனவசதி செய்ய வேண்டிய நிலை கேரளத்துக்கு இல்லை. ஆனால், நமக்கு சிறுவாணி பெரிய குடிநீர் ஆதாரம். அங்கே நீரை தடுத்துவிட்டால் இங்குள்ள பவானி நதிக்கு தண்ணீர் வராது. முல்லைப் பெரியாறுக்கு தமிழகத்தை பழிவாங்கவே கேரளா இப்படியொரு திட்டத்தை செயல்படுத்துவதாக கேரளாவில் உள்ளவர்களே தொடர்ந்து கருத்து தெரிவித்து வந்துள்ளனர்.

சென்ற முறை இதைக் கூறி, அனைத்துக் கட்சிகளையும் திரட்டி போராடினோம். இந்த போராட்டத்தில் வைகோ பங்கேற்றார். இப்போது அதே சூழல் திரும்பவும் தொடங்கியுள்ளது.

கேரள அரசு கடிதங்கள் எழுதியபோது தமிழக அரசு ஏன் வாளாவிருந்தது என்பது ஒரு பக்கம் இருக்கட்டும், இந்த நதிநீர் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தரவேண்டிய மத்திய நிபுணர் குழு தமிழகத்துக்கான காவிரி தண்ணீரை பெற்றுத் தரவேண்டும் என்று கோரிக்கை வைக்கும்போது தமிழக அரசும் எத்தனை கடிதங்கள் எழுதினாலும் மவுனம் காக்கிறது. ஆனால், தமிழகத்துக்கு பாதகமாக முக்காலி, சிறுவாணி அணைகள் கட்ட கேரள அரசு முயற்சிக்கும்போது மட்டும் அங்கிருந்து ஓரிரு கடிதங்கள் வந்தாலே அதற்கு ஆதரவாக அனுமதித்து விடுவது வேடிக்கையாக, ஒரு தலைப்பட்சமாக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x