Published : 21 Mar 2014 07:09 PM
Last Updated : 21 Mar 2014 07:09 PM

திண்டுக்கல்: முன்னாள் சவாலுக்கு சவால்விட்ட இன்னாள்!

திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி, தி.மு.க. வேட்பாளரை ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்வேன் என சவால் விட்டுள்ளார்.

அவரது சவாலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் 'சிட்டிங்' அமைச்சர் நத்தம் ஆர்.விசுவநாதன் அ.தி.மு.க. வேட்பாளரை 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்வேன் என சவால் விட்டுள்ளதால் திண்டுக்கல் மக்களவைத் தொகுதி தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது.

அதிர்ச்சி வைத்தியம்

திண்டுக்கல் அ.தி.மு.க. வேட்பாளராக வழக்கறிஞர் உதயகுமார் போட்டியிடுகிறார். அ.தி.மு.க.வில் சீட்டுக்காக முக்கியத் தலைகள் முட்டி மோதிக்கொள்ள, யாரும் எதிர்பாராதவகையில் நிலக்கோட்டை டவுன் பஞ்சாயத்து வார்டு தேர்தலில் தோற்ற உதயகுமாரை முதல்வர் ஜெயலலிதா அ.தி.மு.க. வேட்பாளராக தில்லாக அறிவித்தார். அதிர்ச்சியில் மீள முடியாமல் தவித்த முக்கிய அ.தி.மு.க. நிர்வாகிகள் வீடுகளில் முடங்கினர்.

அமைச்சர் நத்தம் ஆர்.விசுவநாதனும், முதல்வரின் சுற்றுப்பயணத்தில் சென்றதால் வேட்பாளர் உதயகுமார், நிர்வாகிகள் ஒத்துழைப்பு இல்லாமல் சுயேச்சை வேட்பாளர் போல் தேர்தல் களத்தில் திண்டாடினார். கட்சித் தலைமை, வேட்பாளரை வெற்றிபெற வைக்காவிட்டால் தேர்தலுக்குள் பதவிகள் பறிக்கப்படும் என உள்ளூர் நிர்வாகிகளுக்கு மற்றொரு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது. அதனால், தற்போது அ.தி.மு.க. நிர்வாகிகள் வேட்பாளரை வெற்றி பெற வைக்கவேண்டிய கட்டாயத்தில் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

வெற்றிபெற வேண்டிய கட்டாயம்

தி.மு.க.வில் முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி, 'கை' காட்டும் நபருக்கே சீட் கிடைக்கும் என்பதால் அவரை மீறி நிர்வாகிகள் முயற்சி செய்யவில்லை. ஐ.பெரியசாமி, முன்னாள் சட்டப்பேரவைத் துணைத் தலைவர் காந்திராஜனுக்கு சீட் வாங்கிக் கொடுத்துள்ளார். தான் 'கை' காட்டிய நபருக்கு தலைமை சீட் வழங்கியுள்ளதால் அவரை வெற்றி பெற வைக்க வேண்டிய கட்டாயத்தில் ஐ.பெரியசாமி உள்ளார்.

புதன்கிழமை நடைபெற்ற தி.மு.க. வேட்பாளர் அறிமுக தேர்தல் பிரச்சாரக்கூட்டத்திலும் பேசிய ஐ.பெரியசாமி, காந்திராஜனை ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்பேன் என மு.க.அழகிரி பாணியில் அ.தி.மு.க.வுக்கு பகிரங்க சவால்விட்டார்.

அவருக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் புதன்கிழமை மாலை நடைபெற்ற அ.தி.மு.க. தேர்தல் அலுவலகத் திறப்பு விழாவில் பேசிய 'சிட்டிங்' அமைச்சர் இரா.விசுவநாதன், அ.தி.மு.க. வேட்பாளர் உதயகுமாரை 2 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்போம் என சபதம் செய்யாத குறையாக தி.மு.க.வுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

சூடுபிடிக்கத் தொடங்கியது

ஆரம்பத்தில் அ.தி.மு.க.வில் அமைச்சர் நத்தம் ஆர்.விசுவநாதன் மருமகன் ஆர்.வி.என்.கண்ணனும், தி.மு.க.வில் ஐ.பெரியசாமி மகன் செந்தில்குமாரும் போட்டியிடுவதாக பரபரப்பு ஏற்பட்டது. இருவருமே போட்டியிடாததால் திண்டுக்கல் தொகுதி தேர்தல் களமானது தேர்தல் ஆரவாரம், சுறுசுறுப்பில்லாமல் காணப்பட்டது. தற்போது 'சிட்டிங்' அமைச்சர், முன்னாள் அமைச்சர்கள் மாறி மாறி சவால் விட்டுள்ளதால், யார் சவால் வெற்றி பெறப் போகிறது என்பதால், திண்டுக்கல் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x