எதிர்க்கட்சி தலைவர்களை திட்டமிட்டு பாஜக பழிவாங்குகிறது: முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு

எதிர்க்கட்சி தலைவர்களை திட்டமிட்டு பாஜக பழிவாங்குகிறது: முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு
Updated on
2 min read

புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் வைசியாள் வீதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 26-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. கட்சி அலுவலகம் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்திற்கு நிர்வாகிகள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

நிகழ்ச்சிக்கு, மாநில காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் தலைமை தாங்கினார். முதல்வர் நாராயணசாமி, அமைச்சர் கந்தசாமி, துணை சபாநாயகர் சிவக்கொழுந்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முதல்வர் நாராயணசாமி பேசியதாவது: பிரதமராக இருந்த ராஜீவ்காந்தி நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு சென்றவர். கிராம முன்னேற்றத்துக்கு வித்திட்டவர். வைத்திலிங்கம் முதல்வராக இருந்தபோது இயற்கை பேரழிவு ஏற்பட்டபோது ரூ.50 கோடி கேட்டு மத்திய அரசை அனுகியபோது ரூ.100 கோடியாக தந்தவர் ராஜீவ்காந்தி. எப்போதும் புதுச்சேரி மக்கள் மீது அக்கறை கொண்டவர்.

காங்கிரஸ் கட்சிக்கு இப்போது சோதனைக் காலம். பாஜக திட்டமிட்டு எதிர்க்கட்சி தலைவர்களை பழிவாங்கும் செயலில் ஈடுபட்டு வருகிறது. முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் வீடுகளில் சிபிஐ ரெய்டு, வருமான வரி சோதனை நடத்துகின்றனர். பாராளுமன்றத்தில் பாஜகவை எதிர்த்து பேசியதால் தான் இவ்வாறு ரெய்டு நடத்துகிறார்கள். எந்த குற்றமும் இல்லாத நிலையில் பழிவாங்கும் நோக்கில் மத்திய பாஜக அரசு இவ்வாறு செயல்படுகிறது.

மத்திய அரசின் அராஜக, அதிகார துஷ்பிரயோகம் ரொம்ப காலம் நீடிக்காது. இதையெல்லாம் சமாளிக்கும் சக்தி காங்கிரஸ் கட்சி தலைவர்களுக்கு இருக்கிறது. ஏனென்றால் உயிர் தியாகம் செய்து வளர்ந்த கட்சி காங்கிரஸ். யாராலும் காங்கிரஸை அசைத்து பார்க்க முடியாது. மக்களுக்கும் இது தெரியும். புரிந்து வைத்திருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் விவசாயிகள் வறட்சியால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்கின்றனர். அவர்களுக்கு மத்திய அரசு நிவாரணம் வழங்கவில்லை. மீனவர்களின் பிரச்சினையை தீர்க்கவில்லை. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறுத்தவில்லை. இதையெல்லாம் செய்யாமல் தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்துவிடலாம் என பகல் கனவு காண்கிறார்கள்.

தமிழகம், புதுச்சேரியில் பாஜக வர முடியாது. அதற்கு நாம் வழிவகுத்துவிடக் கூடாது. நாம் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். நமக்குள் கருத்து வேறுபாடு இருக்கும். அதை பேசி தீர்க்க வேண்டும். உரிய காலம் வரும்போது தகுதியானவர்களுக்கு அதிகாரமும், உரிமையும் கிடைக்கும். அதுவரை பொறுத்திருக்க வேண்டும் என்றார்.

கட்அவுட் வைப்பவர்கள் தான் முதல் எதிரி

மேலும் அவர் பேசுகையில், தொகுதிகள்தோறும் எனக்கு பிறந்தநாள் வாழ்த்து பேனர், கட்அவுட் வைக்கின்றனர். கட்அவுட்டுக்கு செலவு செய்யும் பணத்தை முதல்வரின் நிவாரண நிதிக்கு தாருங்கள். பலரது மருத்துவ செலவுக்கு இது உதவும். மாறாக கட்அவுட் எதற்கும் பயன்தராது.

புதுச்சேரியில் வறட்சி நிலவுகிறது. மக்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். முதலில் வளர்ச்சி வரட்டும். யாராவது கட்அவுட் வைத்தால் அவர்கள் தான் எனக்கு முதல் எதிரி என்றார்.

முன்னதாக முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படத்துடன் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இருந்து அண்ணாசாலை, காமராஜர் சாலை வழியாக முருகா தியேட்டர் சிக்னலில் அமைந்துள்ள ராஜீவ்காந்தி சிலைக்கு காங்கிரஸார் பேரணியாக சென்றனர். இதையடுத்து புதுச்சேரி அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் ராஜீவ்காந்தி சிலைக்கு முதல்வர் நாராயணசாமி மாலை அணிவித்தார். தொடர்ந்து வன்முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்றனர். இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in