Published : 28 Jan 2014 08:18 PM
Last Updated : 28 Jan 2014 08:18 PM

ராமேஸ்வரம் - சென்னை ரயிலுக்கு பாம்பன் எக்ஸ்பிரஸ் பெயர் சூட்டுக: கலாம் கோரிக்கை

ராமேஸ்வரம் – சென்னை ரயிலுக்கு 'பாம்பன் எக்ஸ்பிரஸ்' என பெயர் சூட்ட வேண்டும் என்று பாம்பன் பாலத்தின் நூற்றாண்டு விழாவில் தென்னக ரயில்வேக்கு முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கோரிக்கை வைத்தார்.

பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்து துவங்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவுற்றதை சிறப்பிக்கும் வகையில் பாம்பன் ரயில் பாலத்தின் நூற்றாண்டு விழா தொடக்க விழா செவ்வாய்கிழமை பாம்பன் ரயில் நிலையம் அருகே நடைபெற்றது.

பாம்பன் பாலம் நூற்றாண்டு விழாவுக்கு தெற்கு ரெயில்வே நிர்வாக பொது மேலாளர் ராஜேஸ் மிஸ்ரா தலைமை வகித்தார். மதுரை கோட்ட மேலாளர் ரஸ்தோகி வரவேற்புரை ஆற்றினார். சிறப்பு அழைப்பாளர்களாக ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரித்திஷ், சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கல்வெட்டை திறந்து வைத்து ஆற்றிய உரையாற்றும்போது, ''ராமேஸ்வரம் எனது பிறந்த ஊராக இருந்தாலும் பாம்பன் என் வாழ்க்கையில் ஓர் அங்கம். பாம்பனில் என் உறவினர்கள், நண்பர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை எல்லாம் இந்த நிகிழ்ச்சியில் சந்தித்ததில் மகிழ்ச்சி.

இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்னர் மண்டபத்தில் இருந்து பாம்பன் பாலத்துக்கு சிறப்பு ரயில் மூலம் நண்பர்கள் மூலம் வந்தேன். அது ஒரு பரவசமான அனுபவம். அப்போது கடல் ஏற்படுத்திய ஓசையும், இனிமையான கடல் காற்றும் அழகிய கவிதை போன்று இருந்தது.

நான் பள்ளியில் பயிலும்போதும், கல்லூரியில் பயிலும் போதும் பல நூறுமுறை இந்த பாம்பன் பாலத்தை ரயிலில் கடந்து சென்றிருக்கின்றேன். 103 வயது வரை வாழ்ந்த எனது தந்தையாரும், 97 வயது வரை வாழ்ந்த எனது தாயாரும் பல ஆயிரம் முறை இந்த பாம்பன் பாலத்தை கடந்து போயிருப்பார்கள்.

நூற்றாண்டு கண்ட பாம்பன் பாலம் என்றால் என்ன? இந்த பூமி சூரியனை 365 நாள் சுற்றினால் ஓரு வருடம் ஆகின்றது. அது போல 100 முறை சூரியனை சுற்றிவர ஆகும் காலம் நூறாண்டுகள் ஆகும். இந்த நூறாண்டுகள் காலம் பாம்பன் பாலத்தை புயலிலும், சூறாவளியிலும், கடல் சீற்றத்திலும் பாதுகாத்து வரும் தெற்கு ரயில்வே துறையை பாராட்டுகின்றேன்.

மேலும் ராமேஸ்வரம்–சென்னை ரயிலுக்கு 'பாம்பன் எக்ஸ்பிரஸ்' என பெயர் சூட்ட வேண்டும். அதுபோலவே ராமேஸ்வரத்தில் இருந்து செல்லும் ஒவ்வொரு ரயிலிலும் மீனவர்கள் மீன்களை கொண்டு செல்வதற்காக ஐஸ் பெட்டி வசதி செய்து தர வேண்டும் என நான் தெற்கு ரயில்வேக்கு, ரயில்வே அமைச்சருக்கும் கோரிக்கை வைக்கின்றேன், என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x