

கோவை மாவட்டம் மதுக்கரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் 4 பேரைக் கொன்ற காட்டு யானையைப் பிடிக்க கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.
கோவை, மதுக்கரை சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரு நாட்களாக காட்டு யானை ஒன்று வீடுகளை சேதப்படுத்தி மக்களை அச்சுறுத்தி வருகிறது. நேற்று முன் தினம் (புதன்கிழமை) இரவு பி.கே.புதூர் பகுதியில் வனத்துறை ஊழியர்கள் இருவரைத் தாக்கியது.
அதைத் தொடர்ந்து நேற்று இரவு போத்தனூர் கணேஷபுரம் பகுதியில் அந்த யானை நுழைந்தது. அங்கு விஜயகுமார் என்பவர் தனது மகள் காயத்ரியுடன் (12) வீட்டுக்கு வெளியே படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த காட்டுயானை விஜயகுமாரைத் தாக்கியதோடு சிறுமி காயத்ரியை மிதித்துக் கொன்றது. இதையறிந்த அப்பகுதி மக்கள் யானையை அங்கிருந்து விரட்டினர். விஜயகுமார் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காட்டு யானையால் தாக்கப்பட்ட கண்ணன் மருத்துவமனையில் அனுமதி
சிறிது நேரத்தில் வெள்ளலூர் பகுதிக்குள் நுழைந்த அந்த யானை, அங்கு இயற்கை உபாதை கழிக்க வந்த நாகரத்தினம், ஜோதிமணி ஆகிய இரு பெண்களை எதிர்கொண்டு தாக்கியது. கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இருவரும் உயிரிழந்தனர்.
நீர் பாய்ச்ச வந்தரையும் கொன்ற யானை
நீண்ட நேரமாக அங்கு சுற்றித் திரிந்த யானை, மக்கள் விரட்டியதைத் தொடர்ந்து வெள்ளானபாளையம் பகுதிக்குள் நுழைந்தது. அதிகாலை 5 மணியளவில் தோட்டத்துக்கு நீர் பாய்ச்ச வந்த பழனிசாமி என்பவரை மிதித்துக் கொன்றது. அடுத்தடுத்து 4 பேரைக் கொன்று, 5-க்கும் மேற்பட்டவர்களை காயப்படுத்திய யானை, வெள்ளலூர் ரைஸ் மில் பகுதியிலேயே சுற்றி வருகிறது.
4 பேரைக் கொன்ற காட்டு யானை. படம்: ஜெ.மனோகரன் |
கும்கி யானைகள் வரவழைப்பு
யானையைப் பிடிக்க டாப்சிலிப்பில் இருந்து மாரியப்பன், கலீம், கோவை சாடிவயளில் சுஜய், பாரி ஆகிய 4 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. இன்று (வெள்ளிக்கிழமை) மாலைக்குள் ஒற்றை யானை பிடிக்கப்பட்டுவிடும் என வனத்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
யானைக்கு மதம் பிடித்துள்ளதாக கூறப்படுவதால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்துடன் உள்ளனர்.