

கொரட்டூர் ரயில் நிலைய சுரங்கப் பாதை அமைக்கும் பணி தொடங் கப்பட்டு 3 ஆண்டுகள் ஆகியும் இதுவரை நிறைவடையவில்லை. இப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
சென்னையின் புறநகர் பகுதியான கொரட்டூரில் ரயில் நிலையத்தின் இருபுறம் குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியைச் சேர்ந்த மக்கள் வெளியே செல்ல வேண்டுமானால் ரயில் நிலையத்தைக் கடந்துதான் செல்ல வேண்டியுள்ளது. பாதுகாப்பாற்ற முறையில் கடப்பதால் பலர் ரயிலில் அடிபட்டு உயிரிழக்கும் சம்பவங்கள் நடக்கின்றன.
சென்னை-திருவள்ளூர் ரயில் மார்க்கத்தில் அமைந்துள்ள இந்த ரயில் நிலையம் வழியாக பயணிகள் மின்சார ரயில், விரைவு ரயில் மற்றும் சரக்கு ரயில்கள் என நாள் ஒன்றுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதனால் அடிக்கடி ரயில்வே கேட் மூடப்படுவதால் இருபுறமும் நீண்ட வரிசையில் வாகனங்களில் தேங்கி நிற்கும். வாகன ஓட்டிகள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதை விட்டால் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டும்.
இந்நிலையில், பொதுமக்களின் வசதிக்காக கொரட்டூர் ரயில் நிலையம் அருகே சுரங்கப் பாதை அமைக்க தீர்மானிக்கப்பட்டது. ரூ.9.55 கோடி மதிப்பில், 34 மீட்டர் நீளம், 12 மீட்டர் அகலம், 5 மீட்டர் உயரம் கொண்ட சுரங்கப்பாதைப் பணி கடந்த 2013-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2 ஆண்டுகளுக்குள் கட்டி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், 3 ஆண்டுகள் ஆகியும் இதுவரை நிறைவடையவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
இதுகுறித்து, ரயில்வே பொறியாளர் ஒருவரிடம் கேட்டபோது, ‘தண்டவாளத்தின் அடியில் இருந்த சிக்னல் மற்றும் உயர்மின் அழுத்த கேபிள்கள், குடிநீர் குழாய்களை அகற்ற காலதாமதம் ஏற்பட்டது. அதன் பிறகு பள்ளம் தோண்டிய போது பூமியில் தண்ணீர் ஊற்று பெருக்கெடுத்தது. கடந்த டிசம்பர், ஜனவரியில் பெய்த கனமழையில் இப்பள்ளம் முழுவதும் தண்ணீர் நிரம்பியது. அதனை வெளியேற்றவே ஒருசில மாதங்கள் ஆயின. எனினும் தண்ணீர் முழுமையாக வடியவில்லை. தற்போது மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளதால் இப்பணி பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், தண்டவாளத்துக்கு அடியில் பொருத்தப்படும் சிமென்ட் கான்கிரீட் பெட்டிகள் தயார் நிலையில் உள்ளன. அவை ஆகஸ்ட் மாதத்துக்குள் பொருத்தப்படும். அதன் பிறகு மாநில நெடுஞ்சாலைத் துறை ஒத்துழைப்புடன் இருபுறமும் இணைப்புச் சாலைகள் அமைக்கப் படும்’ என்றார்.