

தாம்பரம் - செங்கல்பட்டு இடையே உள்ள மின்சார ரயில் நிலையங்களில் பாதுகாப்பு சுற்றுச்சுவர் இல்லாததுடன், இரவு நேரங்களில் போதிய மின்விளக்கு வசதியும் இல்லாமல் இருப்பது பயணிகள் பாதுகாப்பில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கடற்கரை தாம்பரம் செங்கல்பட்டு புறநகர் பகுதியில் தினமும் 400-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. செங்கல்பட்டு வரையிலான பெரும்பாலான மின்சார ரயில் நிலையங்களில் பாதுகாப்பு சுவர்கள் இல்லை, போதிய அளவில் மின்விளக்கு வசதிகள் இல்லை. இதனால்மர்ம நபர்கள் குற்றச்செயல்கள் செய்து விட்டு, எளிதில் தப்பிச் செல்கின்றனர்.
இது தொடர்பாக ரயில் பயணிகள் கூறும்போது, ‘‘நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஐ.டி பெண் ஊழியர் சுவாதி கொலைக்கு பிறகு மற்ற ரயில் நிலையங்களிலும், ஓடும் ரயில்களிலும் பாதுகாப்பு படையினர் அதிகரிக்கப்பட்டுள்ளது ஆறுதலாக இருக்கிறது. ஆனால், தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு வரையில் உள்ள ரயில் நிலையங்களில் குறிப்பாக, ஊரப்பாக்கம், பொத் தேரி, கூடுவாஞ்சேரி, காட்டாங் குளத்தூர், மறைமலை நகர், சிங்க பெருமாள்கோயில் போன்ற ரயில் நிலையங்களில் பாதுகாப்பு சுற்றுச் சுவர் இல்லை, இரவு நேரங்களில் போதிய மின்விளக்கு வசதி இல்லை. இதனால், குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் எளிதில் தப்பிவிடுகின்றனர். எனவே, போதிய பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்’’ என்றனர்.
இதுதொடர்பாக ரயில்வே பாதுகாப்புத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘சுவாதி கொலைக்கு பிறகு முக்கிய ரயில் நிலையங்களில் 24 மணிநேரமும் பாதுகாப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஓடும் ரயில்கள் மற்றும் ரயில் நிலையங் களில் ரோந்து பணிகளும் தீவிரப்படுத் தப்பட்டுள்ளன. 14 ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணியை தெற்கு ரயில்வே மேற்கொண்டு வருகிறது.
இதுதவிர, புறநகர் மின்சார ரயில் நிலையங்களில் மின்விளக்கு வசதி, சிசிடிவி கேமராக்கள் பொருத்துதல் போன்ற பணிகளை மேற்கொள்ள ரயில்வேதுறைக்கு பரிந்துரை செய்துள்ளோம். தெற்கு ரயில்வேயில் மொத்தம் 96 ரயில் நிலையங்கள் இதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளன’’ என்றனர்.