காங்கிரஸுக்குள் ஒருமித்த கருத்து இல்லை என்பதை ராகுல் உறுதி செய்திருக்கிறார்: ராஜ்நாத் சிங்

காங்கிரஸுக்குள் ஒருமித்த கருத்து இல்லை என்பதை ராகுல் உறுதி செய்திருக்கிறார்: ராஜ்நாத் சிங்
Updated on
1 min read

காங்கிரஸ் கட்சிக்குள் ஒருமித்த கருத்து இல்லை என்பதை ராகுல் காந்தி உறுதி செய்திருப்பதாக, பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

சென்னையில் வெள்ளிக்கிழமை நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது, 'மோடியின் திருச்சி வருகையால், ஆதரவு பெருகி கட்சிக்கு வலு சேர்ந்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக தமிழக அரசியல் கட்சித் தலைவர்களுடன் பேச்சு நடத்தி வருகிறோம். இப்போதைக்கு அதுபற்றி கூற முடியாது. அதேநேரம், தென்னகத்தில் இருந்து கிடைக்கும் ஆதரவு எங்கள் கட்சியின் வெற்றிக்கு மிகப்பெரிய பங்காக அமையும் என்றார்.

இலங்கையில் நடக்க இருக்கிற காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்வது பற்றிய கேள்விக்கு, 'பிரதமர் அந்த மாநாட்டில் கலந்து கொண்டாலும், இந்திய மீனவர்கள் தாக்கப்படுவதை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும்' என்றார்.

தனித்தெலங்கானா பற்றிய கேள்விக்கு, 'ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலம் வேண்டும் என்பவர்களின் கருத்துகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்' என்றார்.

பிரதமரின் அமெரிக்கப் பயணத்தில் பாகிஸ்தான் பிரதமரைச் சந்திப்பது பற்றிய கேள்விக்கு, 'பிரதமர் மன்மோகன் சிங் பாகிஸ்தான் பிரதமரை சந்திக்கக் கூடாது. தன்னுடைய நாட்டிலிருந்து இந்தியாவுக்கு ஊடுருவுகிற தீவிரவாதிகள் குறித்து முதலில் பாகிஸ்தான் வாய் திறக்க வேண்டும்' என்றார்.

தண்டனை பெற்ற எம்.பி., எம்.எல்.ஏ.க்களை தேர்தலில் தகுதி இழக்கச் செய்யும் உச்சநீதிமன்ற உத்தரவு தொடர்பான ராகுல் காந்தியின் கருத்து பற்றி கேட்டதற்கு 'இதுவே காங்கிரஸ் கட்சிக்குள்ளும், கூட்டணி கட்சிகளுக்கு இடையேயும் ஒத்த கருத்து இல்லை என்பதை எடுத்துக்காட்டுகிறது' என்றார்.

சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலை விவகாரத்தில், தமிழக முதல்வர் எங்களுக்கு உதவுவார் என்று நம்புவதாகவும் விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in