

டிடிவி தினகரனின் போலீஸ் காவல் இன்றுடன் முடிவடைகிறது. இதையடுத்து அவரை டெல்லி நீதிமன்றத்தில் போலீஸார் இன்று ஆஜர்படுத்த உள்ளனர்.
இதற்கிடையே, டெல்லியில் சிக்கிய ஹவாலா ஏஜென்ட் வீட்டில் நடத்திய சோதனையில் ரூ.50 லட்சம் சிக்கியது.
இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக அதிமுக அம்மா கட்சி துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜுனா ஆகியோரை கடந்த 25-ம் தேதி டெல்லி போலீஸார் கைது செய்தனர். டெல்லியில் பிடிபட்ட இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தினகரனை போலீஸார் கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து தினகரன், மல்லிகார்ஜுனா இருவரையும் 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க போலீஸாருக்கு டெல்லி மாவட்ட நீதிமன்றம் அனுமதி கொடுத்தது. கடந்த 27-ம் தேதி இருவரையும் போலீஸார் சென்னைக்கு அழைத்து வந்தனர். அடையாறில் உள்ள தினகரன் வீட்டில் வைத்து அவர்களிடம் டெல்லி குற்றப்பிரிவு காவல் உதவி ஆணையர் சஞ்சய் ஷெகாவத் தலைமையிலான போலீஸார் 3 நாட்கள் விசாரணை நடத்தினர். தினகரனின் மனைவி அனுராதாவிடமும் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை முடிந்ததையடுத்து நேற்று முன்தினம் மாலை இருவரையும் மீண்டும் டெல்லிக்கு அழைத்துச் சென்றனர்.
5 வங்கிக் கணக்கு
சென்னையில் நடத்தப்பட்ட விசாரணையில் தினகரனின் 5 வங்கிக் கணக்கு விவரங்களை போலீஸார் சேகரித்துள்ளனர். அதில் நடந்துள்ள பணப் பரிமாற்றம் குறித்து தற்போது விசாரணை நடந்து வருகிறது.
இதற்கிடையே, ஹவாலா ஏஜென்ட் நரேஷ் என்பவரை டெல்லியில் போலீஸார் கடந்த 28-ம் தேதி கைது செய்தனர். அவர் மூலமாக சென்னையில் இருந்து கொச்சி வழியாக டெல்லிக்கு ரூ.10 கோடி கொண்டு செல்லப்பட்டு, சுகேஷிடம் தரப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து நரேஷ் அனுப்பிய ரூ.10 கோடி பணத்தை டெல்லியில் ஷாபைசால் என்பவர் பெற்று, இடைத்தரகர் சுகேஷிடம் கொடுத்துள்ளார்.
தினகரன் பணமா?
டெல்லியில் உள்ள நரேஷின் வீடு, அலுவலகத்தில் போலீஸார் நேற்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு பதுக்கி வைத்திருந்த ரூ.50 லட்சத்தை கைப்பற்றியுள்ளனர். இதுவும் தினகரனிடம் இருந்து பெறப்பட்ட பணம்தான் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் தினகரன், மல்லிகார்ஜுனா ஆகியோரின் போலீஸ் காவல் இன்றுடன் முடிகிறது. இதையடுத்து அவர்களை டெல்லி மாவட்ட நீதிமன்றத்தில் போலீஸார் இன்று ஆஜர்படுத்த உள்ளனர்.