‘பஞ்சு, நூல் ஏற்றுமதியை தடை செய்தால் திருப்பூர் தொழில் துறை சிறப்பாகச் செயல்படும்’

‘பஞ்சு, நூல் ஏற்றுமதியை தடை செய்தால் திருப்பூர் தொழில் துறை சிறப்பாகச் செயல்படும்’
Updated on
1 min read

பஞ்சு மற்றும் நூல் ஏற்றுமதியை மத்திய அரசு தடை செய்தால் மட்டுமே, திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் சிறப்பாக செயல்பட முடியும் என தெரிவிக்கப்பட்டது.

நூல் விலை உயர்வு குறித்து ஆலோசிக்கும் வகையில், பின்னலாடைத் துறை சார்ந்த தொழில் அமைப்புகள் மற்றும் அனைத்து தொழிலாளர் சங்கத்தினர் கலந்துகொண்ட சிறப்பு ஆலோசனைக் கூட்டம், திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்க (டீமா) அலுவலகத்தில் நடைபெற்றது.

இதுதொடர்பாக ‘டீமா’ தலைவர் எம்.பி.முத்துரத்தினம் பேசும்போது, “பின்னலாடைத் தொழில் மட்டுமின்றி ஒட்டுமொத்த ஜவுளித்தொழிலும் நூல் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரு மாதங்களில் நூல் விலை கிலோவுக்கு ரூ.28 அதிகரித்துள்ளது. இன்னும் விலை உயரும் என்று எதிர்பார்ப்பதால், பின்னலாடை உற்பத்திக்குத் தேவையான நூலை உற்பத்தியாளர்கள் விநியோகம் செய்யாமல் நிறுத்திவைத்துள்ளனர். இதனால், சிறிய அளவில் உற்பத்தி செய்யும் அனைத்து நிறுவனங்களும் செய்வதறியாமல் உள்ளன.

பஞ்சு மற்றும் நூல் ஏற்றுமதியை மத்திய அரசு தடை செய்தால் மட்டுமே, திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் சிறப்பாக செயல்பட முடியும்” என்றார்.

திருப்பூர் பின்னலாடைத் தொழில் கூட்டமைப்பை முறையாக செயல்பட வைத்து, அனைத்து சங்கங்களும் இணைந்து மத்திய, மாநில அரசுகளை உடனடியாக சந்தித்து பிரச்சினைகளை எடுத்துக் கூறி தீர்வு காண வேண்டும்.

இங்கிருந்து வேறு மாநிலங்களுக்கு பின்னலாடைத் தொழில் இடம்பெயரக்கூடிய அபாயகரமான சூழ்நிலை நிலவி வருவதால், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

தொழிற்சங்கத்தினர் பேசும்போது, “பின்னலாடைத் துறையின் பிரச்சினைகளுக்கு அரசுகள் முன்னுரிமை அளிப்பதில்லை. இந்தியப் பஞ்சுக் கழகத்தை (சிசிஐ) பொறுத்தவரை, நிலையான விலையேற்றத்தை செய்வதில்லை. பணம் இருப்பவர்கள் பஞ்சு மற்றும் நூலைப் பதுக்கி, செயற்கையான பற்றாக்குறை ஏற்படுத்துவதற்கு சிசிஐயும் துணை போகிறது.

பல்லடம் விசைத்தறியாளர்கள் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இப்படி எதுவாக இருந்தாலும், அரசின் கவனத்தை முழுமையாக ஈர்க்கும் வகையில் அனைவரும் இணைந்து ஒருமித்த குரல் எழுப்பி செயல்பட்டால்தான், நிரந்தரத் தீர்வுக்கு வழி காண முடியும்.

சிறு தொழில்களைக் காப்பாற்றுவதற்குப் பதில், அழிப்பதில்தான் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. நூல் விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்த பஞ்சு மற்றும் நூலை அரசு கொள்முதல் செய்து விற்பனை செய்ய வேண்டும்” என்றனர்.

டீமா அமைப்பின் செயலாளர் செந்தில்வேல், டெக்மா சார்பில் கே.பி.கோவிந்தசாமி, டிப் தலைவர் அகில் மணி, சிஸ்மா பொதுச் செயலாளர் கே.எஸ்.பாபுஜி மற்றும் பல்வேறு தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in