ஜல்லிக்கட்டு நடைபெற உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்: முத்தரசன்

ஜல்லிக்கட்டு நடைபெற உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்: முத்தரசன்
Updated on
1 min read

ஜல்லிக்கட்டு நடைபெற உரிய நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், '' காலங்காலமாக நடைபெற்று வந்த தமிழர்களின் பண்பாட்டு பாரம்பரியமிக்க தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு கடந்த மூன்று ஆண்டுகாலமாக நடைபெறவில்லை. இவ்வாண்டு நடைபெறும் என்ற நம்பிக்கையோடு இருந்த நிலையில் உச்ச நீதிமன்றம் தடையை தொடர்ந்து நீடிக்க செய்துள்ளது அதிர்ச்சியளிக்கின்றது.

தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும், இளைஞர்களும் தன்னெழுச்சியாக வீதியில் இறங்கி போராடிக் கொண்டு இருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

தமிழர்களின், பண்பாட்டு, பாரம்பரிய மிக்க வீரவிளையாட்டை தடைசெய்து தமிழர்களின் பண்பாட்டை சீர்குலைப்பது மட்டுமல்ல, தமிழக மக்கள் தங்கள் வளர்த்து வரும் வீட்டு கால்நடை செல்வங்களான நாட்டு மாடுகளை அடியோடு அழிக்கும் உள்நோக்கமுடையது என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. மக்களின் உணர்வுகளுக்கு உரிய முறையில் உரியவர்கள் மதிப்பளித்து, தங்களின் கௌரவத்தை காப்பாற்றிக் கொள்ளவேண்டும்.

அடக்குமுறை சட்டங்கள் ஒருபோதும் வெற்றி பெற்றது இல்லை என்பதனை உணர வேண்டும்.

காட்சிப்படுத்தும் விலங்கினப் பட்டியலில் இருந்து காளை இனம் நீக்கப்பட்டு, உரிய அவசர சட்டத்தின் மூலம் இவ்வாண்டு ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கும், நடத்துவதற்கும் மத்திய, மாநில அரசுகள் பொறுப்புடன் பொறுப்பேற்க வேண்டும். போராடும் மாணவர்கள் மீது மதுரையில் காவல்துறை தடியடி நடத்தியதை வன்மையாக கண்டிக்கின்றோம்.

ஜனநாயக உரிமைகளை பறிக்கும் அதிகாரத்தை தமிழக காவல்துறை தன் கையில் எடுத்துக் கொள்வதை தவிர்க்க உரிய நடவடிக்கைகளை தமிழக முதல்வர் எடுத்திட வேண்டும்'' என்று முத்தரசன் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in