

கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் தக்காளி விலை வீழ்ச்சியால் நஷ்டமடைந்த விவசாயிகள், மீண்டும் பயிரிடாமல் விட்டதுதான் இப்போதைய விலை ஏற்றத்துக்கு காரணம் என்று வியாபாரிகள் கூறுகின்றனர்.
ஆந்திரம், கர்நாடக மாநிலங்கள் மற்றும் தமிழகத்தில் ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சென்னை கோயம்பேடு சந்தைக்கு தக்காளி அதிக அளவில் வருகிறது. இந்நிலையில், தக்காளி விலை சமீபத்தில் கிடுகிடுவென உயர்ந்தது. ஜூன் 14-ம் தேதி கோயம்பேடு சந்தையில் ரூ.80-க்கும், ஜாம் பஜார் போன்ற சில்லறை சந்தைகளில் ரூ.100-க்கும், புறநகர் பகுதிகளில் ரூ.120 வரையும் விற்கப்பட்டது.
தமிழகம் மட்டுமல்லாது, நாடு முழுவதும் இதே நிலை நீடித்தது. இதைத் தொடர்ந்து, தக்காளி விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களை நடத்தின. இதனால் கடந்த 2 நாட்களாக தக்காளி விலை இறங்குமுகமாக உள்ளது. நேற்றைய நிலவரப்படி ஜாம்பஜாரில் ரூ.60-க்கும், கோயம்பேடு சந்தையில் கிலோ ரூ.55-க்கும், அரசின் பண்ணை பசுமைக் கடைகளில் ரூ.49-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
விலை உயர்வுக்கான காரணம் குறித்து கோயம்பேடு சந்தையின் தக்காளி வியாபாரிகள் சங்கத் தலைவர் எம்.தியாகராஜன் கூறியதாவது:
வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பிற இடங்களில் இருந்தும் கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் கோயம்பேடு சந்தைக்கு 80 லோடு வரை தக்காளி வந்தது. தற்போது 45 லோடு மட்டுமே வருகிறது. விலை உச்சத்தில் இருந்தபோது, 32 லோடு மட்டுமே வந்தது.
தக்காளி விலை கடந்த பிப்ரவரி முதல் வாரத்தில் ரூ.10-க்கும் கீழ் வீழ்ச்சி அடைந்து, ஏப்ரல் 2-வது வாரம் வரை அதே நிலை நீடித்தது. அப்போது, கிலோ ரூ.9-க்கும் குறைவாக விற்றது. கொள்முதல் விலை ரூ.6 ஆக இருந்தது. இதனால் விவசாயிகள் அதிக அளவில் நஷ்டம் அடைந்தனர். அதில் இருந்து மீளாத விவசாயிகள், அடுத்த பட்டத்துக்கு தயாராகவில்லை. இதனால் பயிரிடும் பரப்பு குறைந்து, விளைச்சலும் குறைந்தது. கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நிலவிய அதிக வெயில், பருவம் தவறிய மழை போன்ற காரணங்களாலும், உற்பத்தி வெகுவாக குறைந்தது. இதனால்தான் தக்காளி விலை உயர்ந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.