

சென்னை காற்றாலை மின் உற்பத்தி சரிவு, மின் நிலையங்களில் ஏற்பட்டுள்ள கோளாறு மற்றும் கோடைகால மின் தேவை அதிகரிப்பு போன்ற காரணங்களால் சென்னை தவிர பிற மாவட்டங்களில் 5 மணி நேர மின் வெட்டு அமலாகியுள்ளது. இதனால் பொதுமக்களும் மாணவர்களும் மீண்டும் அவதிக்கு ஆளாகியுள்ள னர்.
தமிழகத்தில் மின்வெட்டு பிரச் சினையைத் தீர்க்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண் டது. ஏற்கெனவே கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருந்த மின் நிலையங்களின் பணிகளை துரிதப்படுத்தியது. வட சென்னை அனல் மின் நிலையத்தின் இரண்டு அலகுகளில் 1,000 மெகாவாட்டும், வள்ளூர் நிலையத்தில் 1,000 மெகாவாட், மற்றொரு 500 மெகா வாட் சோதனை முறையிலும், மேட்டூர் நிலையத்தில் 600 மெகா வாட்டும், நெய்வேலி இரண்டாம் நிலை நிலையத்தில் சோதனை உற்பத்தியில் 250 மெகாவாட்டும், கூடங்குளம் நிலையத்தில் 750 மெகாவாட்டும் கூடுதலாக மின் உற்பத்தி கிடைத்து வருகிறது.
இதனால், கடந்த சில மாதங்க ளாக மின் வெட்டு ஓரளவு நீங்கியது. ஆனால், கடந்த புதன்கிழமை முதல் மீண்டும் அனைத்து மாவட்டங் களிலும் மின் வெட்டு அமலாகத் தொடங்கியது. முதலில் ஒரு மணி நேரமாக இருந்த மின் தடை வியாழனன்று 2 மணி நேரமாகி, வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் 5 மணி நேரமாக அதிகரித்துள்ளது. இதனால் பொதுத் தேர்வு மற்றும் ஆண்டுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ள னர். பொதுமக்களும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
இதுகுறித்து மின் துறை அதிகாரிகள் கூறியதாவது:
வழக்கமாக ஏப்ரல் தொடக்கத்தில் அல்லது மார்ச் மாத இறுதியில் தொடங்கி, அக்டோபர் வரை காற்றாலை மின் உற்பத்தி அதிகமாக இருக்கும். இந்த ஆண்டு வழக்கத்துக்கு மாறாக மார்ச் 2-வது வாரம் வரை, காற்றாலை மின் உற்பத்தி ஓரளவுக்கு கை கொடுத்து வந்தது. அடுத்த ஆண்டுக்கான காற்றாலை உற்பத்தி சீசன் தொடங்க வேண்டிய நிலையில், தற்போதுதான் சீசன் முடிவுக்கு வருகிறது. எனவே, இந்த ஆண்டு மே முதல் வாரம் வரை, காற்றாலை மின் உற்பத்தி சரிவாகவே இருக்கும் எனத் தெரிகிறது.
இதேபோல் பனிக்காலம் முடிந்து, கோடை தொடங்கியுள்ள தால் பெரும்பாலானோர் மின் தேவையும் அதிகரித்துள்ளது. குளிர்சாதன இயந்திரங்களின் பயன்பாட்டை மக்கள் அதிகரித்து விட்டனர். இதனால் மீண்டும் மின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையே தூத்துக்குடி, மேட்டூர், வடசென்னை, நெய்வேலி மின் நிலையங்களின் சில அலகுகளில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறால் 2,550 மெகாவாட் மின் உற்பத்தி பாதித்துள்ளதும் கூடுதல் மின் தடைக்கு காரணம் என மின் துறையினர் தெரிவித்தனர்.