Published : 16 Dec 2013 08:20 AM
Last Updated : 16 Dec 2013 08:20 AM

பா.ஜ.க.வுடன் கூட்டணியா?- கருணாநிதி பதில்

பா.ஜ.க.வுடன் திமுக கூட்டணி அமைக்குமா என்பதற்கு கருணாநிதி பதிலளித்தார். திமுக பொதுக்குழுக் கூட்டத்துக்கு பிறகு நிருபர்களுக்கு கருணாநிதி அளித்த பேட்டி:

பொதுக்குழு உறுப்பினர்கள், அணிகளின் அமைப்பாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் மொத்தம் 2,421 பேரில், 2,206 பேர் பொதுக்குழுவில் கலந்து கொண்டனர். டிசம்பர் 21-ம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் பொதுக்குழு விளக்கப் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும். யார், யார் எங்கு கலந்து கொள்வார்கள் என்ற பட்டியல் பின்னர் வெளியிடப்படும்.

தொடர்ந்து நிருபர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள்:

நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது பற்றி பொதுக்குழுவில் முடிவு செய்யப்பட்டதா?

அதைப் பற்றியெல்லாம் தீர்மானங்களில் குறிப்பிட்டிருக்கிறோம். நாடாளுமன்றத் தேர்தல் பற்றியும் தீர்மானத்தில் சொல்லியிருக்கிறோம்.

பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு இருக்கிறதா?

கூட்டணி அமைப்பது பற்றி பேசுவதற்காக பேச்சுவார்த்தைக் குழு ஒன்று அமைக்கப்படும் என்று தீர்மானத்தில் குறிப்பிட்டிருக்கிறோம். அந்தக் குழு, இதையெல்லாம் ஆராய்ந்து எங்களிடம் தெரிவிக்கும். பின்னர் நாங்கள் முடிவெடுப்போம்.

பா.ஜ.க. அல்லது காங்கிரஸுடன் கூட்டணி இருக்கும் என்று எதிர்பார்க்கலாமா?

பொதுக்குழுவில் நான் பேசியது அநேகமாக உங்கள் காதுகளில் விழுந்திருக்குமே?

மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை அதிகாரிகள் மாநாடு நடந்து, சிறப்பாகப் பணியாற்றியவர்களுக்கு விருதுகள் எல்லாம் வழங்கப்பட்டிருக்கின்றன. ஆனால், அடுத்த நாளே தூத்துக்குடியில் வகுப்புக் கலவரம் நடந்திருக்கிறது. ஆலங்குளத்தில் 3 பேர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இதைப்பற்றி உங்கள் கருத்து என்ன?

மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் மாநாடு நடந்ததையும் அதிகாரிகளை பாராட்டி, பரிசுகளை முதல்வர் வழங்கியதையும் நீங்களே சொன்னீர்கள். இப்போது தூத்துக்குடியில் வகுப்புக் கலவரம், படுகொலை நடந்தது பற்றியும் நீங்கள்தான் சொன்னீர்கள். இதைத்தவிர நான் என்ன சொல்ல முடியும்? இதுதான் அன்றாடம் தமிழகத்தில் நடக்கின்ற சட்டம், ஒழுங்கு பாதுகாப்பு என்றார் கருணாநிதி.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x