

பெரம்பலூரில் மாந்திரீகம் செய்ய பயன்படுத்திய சென்னை பெண்ணின் சடலம் நேற்று மீண்டும் பிரேத பரிசோதனைக்குப் பின் தகனம் செய்யப்பட்டது.
பெரம்பலூரில் மாந்திரீக மையம் நடத்தி வந்த கார்த்திகேயன் என்பவர், சென்னை மயிலாப்பூரில் மயானத்தில் புதைக்கப்பட்ட இளம்பெண் அபிராமியின் சடலத்தை மயான ஊழியர்கள் உதவியுடன் தோண்டி எடுத்து பெரம்பலூர் கொண்டு வந்து பூஜை நடத்தினார். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் தெரிவித்த தகவலையடுத்து, மந்திரவாதி கார்த்திகேயன், அவரது பெண் தோழி நசீமா என்கிற தீபிகா உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவரது வீட்டிலிருந்து 20 மனித மண்டை ஓடுகள், 40 கடல் குதிரைகள், காளி மற்றும் விநாயகர் சிலைகள், கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
கார்த்திகேயன் வீட்டிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட அபிராமியின் சடலம், பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் நேற்று மீண்டும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதன்பின், பெரம்பலூர்-ஆத்தூர் ரோட்டிலுள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இந்த இறுதிச் சடங்கில் அபிராமியின் தாய் காமாட்சி, சகோதரர் திருவரங்கன் ஆகியோர் கலந்துகொண்டனர்.