

தமிழகத்தில் வரும் மே மாதம் 15-ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் உயர் நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது. ஆனால், இதனை, ஏற்க மறுத்த நீதிமன்றமோ, "உத்தேச தேதி தேவையில்லை உறுதியான தகவலை சொல்லுங்கள்" என கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழக உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்ததை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையம் தொடர்ந்த மேல் முறையீட்டு மனு மீது இன்று (திங்கள்கிழமை) விசாரணை நடைபெற்றது.
அப்போது, நீதிபதிகள் நூட்டி ராமமோகன ராவ், எஸ்.எம்.சுப்பிரமணியம் அடங்கிய அமர்வு முன், மாநில தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.குமார், "வரும் மே 15-க்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும்" என உறுதியளித்தார்.
ஆனால், இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், "ஏற்கெனவே 3 மாதங்கள் கடந்துவிட்டன. இன்னமும் உத்தேச தேதி கூறாமல் தேர்தல் நடத்தும் தேதியை இறுதிப்படுத்திச் சொல்லுங்கள்" என கண்டிப்புடன் கூறினர். மேலும், வழக்கு விசாரணையை ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
முன்னதாக இந்த வழக்கு இரண்டு தினங்களுக்கு முன்னர் விசாரணைக்கு வந்தபோது, "தேர்தல் நடத்தவும், வழக்கை நடத்தவும், நீங்கள் விரும்பவில்லை போலத் தெரிகிறது; வழக்கை இழுத்தடிக்கிறீர்கள். ஆவணங்களை எல்லாம் முறையான வடிவத்தில் ஏன் தாக்கல் செய்யவில்லை. உங்களிடம் நகல் எடுக்கும் இயந்திரம் இல்லையா?" என, தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞரை கடுமையாக கண்டித்தனர் என்பது கவனிக்கத்தக்கது.
இந்நிலையில், இன்றும் தேர்தல் ஆணையத்தை கடுமையாக விமர்சித்துள்ள உயர் நீதிமன்றம், உள்ளாட்சித் தேர்தல் எப்போது நடத்தப்படும் என்பதை உறுதிபட தெரிவிக்குமாறு வலியுறுத்தியுள்ளது.
வழக்கு பின்னணி:
தமிழக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் கடந்த அக்டோபர் 24-ம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில், 2 கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுவதாக மாநில தேர்தல் ஆணையம் செப்டம்பரில் அறிவிப்பு வெளியிட்டது. அடுத்த நாளே வேட்புமனு தாக்கல் தொடங்கியது. தமிழகம் முழுவதும் சுமார் 5 லட்சம் பேர் மனுதாக்கல் செய்தனர்.
இந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் பழங்குடியினருக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்று கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி எம்.பி. வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை நீதிபதி என்.கிருபாகரன் விசாரித்தார். ‘அவசர கதியில் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு பஞ்சாயத்து சட்ட விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட வில்லை’ என்று கூறி, நடக்கவிருந்த உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்து, அக்டோபர் 4-ல் உத்தரவிட்டார். டிசம்பர் 31-க்குள் தேர்தலை நடத்தி முடிக்குமாறும், அதுவரை உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அலுவலரை நியமிக்கவும் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையம், தமிழக அரசு சார்பில் தனித்தனியாக மேல்முறையீடு செய்யப்பட்டது.