

ராமநாதபுரம் மாவட்டத்தில் வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத்திலிருந்து பருவமழை காலத்தில் காய்ச்சல் பரவுவது வழக்கமாகவே உள்ளது. கடந்த 2012, 2013 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் நான் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலங்களில், பலமுறை எச்சரித்தும், அரசு அதிகாரிகளின் மெத்தனத்தால் கீழக்கரை, பாம்பன், ராமேசுவரம் பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் உயிரிழப்புகள் ஏற்பட்டன.
இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 2 வரை ராமநாதபுரம் மாவட்டத்தில் சுகாதாரத்துறை மற்றும் ஊரக வளர்ச்சி ஊராட்சித்துறை இணைந்து 5 நாட்கள் தூய்மைப் பணிகள் மேற்கொள்ள வேண்டும். ஊராட்சிப் பகுதிகளில் உள்ள நீர்த்தேக்க தொட்டிகளில் கிருமி நாசினிகளைத் தெளித்து, பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும். கழிவுநீர் கால்வாய்களின் அடைப்புகள் நீக்க வேண்டும். ஏடிஸ், லார்வா கொசு உற்பத்தியைத் தடுக்க நீர் தேங்கும் தேவையற்ற பொருட்களை உடனடியாக அகற்ற வேண்டும். ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் 20 தற்காலிக சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் துப்புரவுப் பணியாளர்கள் ஆகியோருடன் சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சார்பில் உத்தரவிடப்பட்டது.
ஆனால் இதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் பத்து சதவீதப் பணிகள் கூட நடக்கவில்லை. கடந்த செப்டம்பர் 12 அன்று மீண்டும் மாவட்ட ஆட்சியர் நடராஜன் பணிகள் தொய்வின்றி நடைபெற இரண்டாவது முறையாக அனைத்து அரசு அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியுள்ளார்.
தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் மலேரியாவும், டெங்குவும் வேகமாகப் பரவி வருகின்றன. சரியான முறையில் கொசுவுக்குப் புகை மருந்து அடிப்பதில்லை; கிணறுகளிலும் மருந்து தெளிப்பதில்லை. முறையான கண்காணிப்பு இல்லை என தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களிடையே அதிருப்தி நிலவி வருகிறது. டெங்கு, மலேரியா காய்ச்சல்களால் பாதிக்கப்படும் மக்களுக்கு மாவட்டத் தலைமை மருத்துவமனை உட்பட அரசு மருத்துவ மனைகளில் தகுந்த சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் அரசு மருத்துவமனைகளில் மலேரியா மற்றும் டெங்கு முறையாக சோதித்து, மேலும் வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தி உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.