Published : 29 Nov 2013 09:32 AM
Last Updated : 29 Nov 2013 09:32 AM

ஏற்காடு இடைத்தேர்தல்: திமுக கோரிக்கையை நிராகரித்தது உயர் நீதிமன்றம்

ஏற்காடு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் நடவடிக்கைகளை நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் என்ற திமுகவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் மனு தாக்கல் செய்திருந்தார்.

ஏற்காடு இடைத்தேர்தலுக்காக தமிழக அமைச்சர்கள் அனைவரும் அங்கு முகாமிட்டு ஆளும் கட்சிக்காக தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அரசு அலுவலர்களையும் அதிமுக வுக்கு ஆதரவாக தேர்தல் பணிகளில் ஈடுபட வைக்கின்றனர். சேலம் மாவட்ட ஆட்சியரும் அதிமுகவுக்கு ஆதரவாகவே செயல்படுகிறார்.

இந்நிலையில் வரும் டிசம்பர் 4-ம் தேதி நடைபெறவுள்ள வாக்குப் பதிவு நேர்மையான முறையில் நடைபெற தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொகுதியில் உள்ள எல்லா வாக்குச் சாவடிகளுமே பதற்றம் நிறைந்தவையாக உள்ளன. ஆகவே, அனைத்து வாக்குச் சாவடிகளிலும் நடைபெறும் வாக்குப் பதிவு பணிகளை வெப் கேமரா மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்யவும், வாக்குப் பதிவு பணிகளை வீடியோவில் பதிவு செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சி.ஆர்.பி.எப். அல்லது துணை ராணுவப் படையினரை அனைத்து வாக்குச் சாவடிகள் மற்றும் வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்த வேண்டும்.

இதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்படி தேர்தல் ஆணை யத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். மேலும், தேர்தல் நட வடிக்கைகள் அனைத்தையும் உயர் நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி கே.கே.சசிதரன், தேர்தல் நடவடிக்கைகளை நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்து வியாழக்கிழமை தீர்ப்பளித்தார்.

ஏற்காடு தொகுதியில் மொத்த முள்ள 290 வாக்குச் சாவடிகளில் 272 சாவடிகளில் வெப் கேமராக்களைப் பொருத்தி நேரடி ஒளிபரப்பு செய்யவும், மீதமுள்ள 18 வாக்குச் சாவடிகளில் வீடியோ பதிவுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

இது தவிர துணை ராணுவப் படையைச் சேர்ந்த 240 வீரர்களும், மத்திய தொழில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 300 வீரர்களும் ஏற்கெனவே பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தேர்தல் கள நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக வெளி மாநிலங்களைச் சேர்ந்த 2 மூத்த அதிகாரிகளை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. தேர்தலை நியாய மாகவும், நேர்மையாகவும் நடத்தத் தேவையான எல்லா ஏற்பாடுகளையும் செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

இந்த சூழலில் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு எதையும் பிறப்பிக்க வேண்டிய சூழல் தற்போது எழவில்லை என்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார். இந்த வழக்கில் திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், தேர்தல் ஆணையம் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x