Published : 19 Nov 2013 12:00 AM
Last Updated : 19 Nov 2013 12:00 AM

தடைகளைத் தாண்டியது 500 மெகாவாட் குந்தா நீரேற்று மின்நிலையம்

காவிரியை காரணம் காட்டி, கடந்த ஐந்தாண்டுகளாக மத்திய நதி நீர் ஆணையத்தால் முட்டுக்கட்டை போடப்பட்டுவந்த 500 மெகாவாட் குந்தா நீரேற்று மின் உற்பத்தி திட்டப் பணிகள், தமிழக அரசின் முயற்சியால் மீண்டும் தொடங்க உள்ளன.

முதல் கட்டமாக நீலகிரியில், 500 மீட்டர் நீளத்துக்கு தண்ணீரை ஏற்றும் சுரங்கப்பாதை அமைக்க, மின் துறையின் சார்பில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மரபு சாரா எரிசக்தி யான காற்றாலை, சூரியசக்தி, உயிரி தொழில்நுட்பம் உள்ளிட்ட மின் உற்பத்தி திட்டங்கள் அதிகரித்துள்ளன. இந்நிலையில், காற்றாலை மின் உற்பத்தி, காற்று வீசும் சீசனுக்கு ஏற்ப மாறுபடும் என்பதால், காற்றாலை மின்சாரத்தை சேமிக்கும் மின் திட்டங்கள் அதிகம் தேவைப்படுகின்றன.

இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைத் தொடரில், நீலகிரி மாவட்டத்தில், குந்தா ஆற்றின் குறுக்கே, அவலாஞ்சி மற்றும் எமரால்டு அணைகளுக்கு மத்தியில், 500 மெகாவாட் திறன் கொண்ட நீரேற்று மின் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது.

இதற்கான திட்ட வரைவு 2005ம் ஆண்டு இறுதியில் உருவாக்கப்பட்டு, மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அனுமதிக்காக அனுப்பப்பட்டது. வனத்துறையின் சார்பில் ஐந்தாண்டு காலத்திற்கான கட்டுமான அனுமதி கிடைத்த நிலையில், 2007ல் மத்திய நதி நீர் ஆணையம் முட்டுக்கட்டை போட்டது.

குந்தா ஆற்று நீர், பவானி ஆற்றில் கலந்து காவிரியில் சேருவதால், காவிரி நீரில் பங்கு கொண்ட கர்நாடகம், கேரளம் மற்றும் புதுச்சேரி அரசுகளிடம் தடையில்லா சான்று வாங்க வேண்டுமென்று கூறி, நதிநீர் ஆணைய அதிகாரிகள் திட்டப்பணிகளுக்கு அனுமதி தர மறுத்துவிட்டனர்.

இந்நிலையில் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், குந்தா நீரேற்று மின் திட்டத்துக்கு அனுமதி பெற தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதுகுறித்து, தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் மின் துறை அமைச்சர் விஸ்வநாதன் ஆகியோர் சட்டசபையிலும் விரிவான விளக்கம் தெரிவித்தனர்.

மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் அனுமதி கடந்த சில மாதங்களுக்கு முன்பு காலாவதியாக இருந்த நிலையில், தமிழக அரசின் தொடர் முயற்சியால், அனுமதியை ஓராண்டுக்கு, நீட்டித்து வனத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து மின் துறையின் திட்டத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘ஒராண்டுக்குள் பணியைத் தொடங்க வேண்டுமென்றும், மத்திய அரசு காலக்கெடு விதித்துள்ளது. எனவே தற்போது திட்ட மதிப்பீட்டை மூன்றாகப் பிரித்து, நீர் மின் திட்டப்பணிகளை முழு வீச்சில் தொடங்கியுள்ளோம்’ என்றார்.

ரூ.500 கோடிக்கு மேலான நீர் மின் திட்டப்பணிகளுக்கு மத்திய நதி நீர் ஆணையத்தின் அனுமதி பெற வேண்டும். தற்போது, நதி நீர் ஆணையம் தடையை விலக்காத நிலையில், திட்ட மதிப்பை பிரித்து பல்வேறு கட்டங்களாக மேற்கொள்ள, மின் வாரியம் திட்டமிட்டுள்ளது.முதற்கட்டமாக, எமரால்டு அணை அருகே 500 மீட்டர் நீளத்துக்கு சுரங்கப்பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

“இதற்காக, சுரங்கப்பாதை அமைக்கும் தனியார் நிறுவனத்தை தேர்ந்தெடுக்க கடந்த 12ம் தேதி சர்வதேச ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை அனுப்புவதற்கு, டிசம்பர் 13-ம் தேதி இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது” என மின் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சுமார் ரூ.1,200 கோடி மதிப்பிலான குந்தா திட்டத்தை 3 ஆண்டுகளுக்குள் முடிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் இரவு நேரத்தில் அதிகமாக உற்பத்தியாகும் காற்றாலை மின்சாரத்தை பயன்படுத்தி, அவலாஞ்சி மற்றும் எமரால்டு அணைகளுக்கு இடையே நீரை பரிமாற்றம் செய்து, தேவைப்படும் நேரத்தில் நீரை மறு சுழற்சி செய்து, நான்கு யூனிட்டுகளில் தலா 125 மெகாவாட் வீதம், 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x