ரூ.4-க்கு ‘அயர்ன்’ செய்துதரும் திருச்சி சிறைக் கைதிகள் : சிறையில் மற்றொரு புதிய முயற்சி

ரூ.4-க்கு ‘அயர்ன்’ செய்துதரும் திருச்சி சிறைக் கைதிகள் : சிறையில் மற்றொரு புதிய முயற்சி
Updated on
2 min read

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் கடந்த 9 மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்ட சிறை அங்காடி தற்போது நல்ல லாபத்தில் இயங்குவதால், அடுத்த கட்டமாக சிறை அங்காடிக்கு அருகில் உள்ள சிறிய கட்டிடத்தில் அயர்னிங் சென்டர் ஒன்றை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.

இதுகுறித்து திருச்சி மத்திய சிறை கண்காணிப்பாளர் பழனி ‘தி இந்து’ விடம் கூறியதாவது:

முதலில் காய்கறி, ஸ்வீட், காரம், டீ, காபியுடன் ஆரம்பிக்கப்பட்ட திருச்சி சிறை அங்காடியில் தொடர்ந்து டிபன், கலவை சாதம் வழங்கி வருகிறோம். குறைந்த விலையில் தரமாக இருப்பதாலும், கைதிகளின் தயாரிப்பு என்பதாலும் பொதுமக்கள் மத்தியில் இங்கு விற்கும் பொருட்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அங்காடிக்கு வரும் பொதுமக்கள் பலரும் துணிகளை அயர்ன் செய்ய பைகளில் எடுத்துச் செல்வதை பார்த்த நாங்கள், அயர்னிங் சென்டர் ஆரம்பித்து குறைவான விலைக்கு அயர்ன் செய்து கொடுக்கலாம் என முடிவெடுத்தோம்.

சிறையில் பணிபுரிவோருக்கு ரூ.2 கட்டணம்

அதன்படி சிறை அங்காடிக்கு அருகில் இருந்த இடத்தில் அயர்னிங் சென்டர் ஆரம்பித்தோம். இதில் தண்டனை கைதிகள் 3 பேர் அயர்ன் செய்யும் வேலையில் ஈடுபட் டுள்ளனர். சிறையில் பணிபுரி பவர்களுக்கு சர்ட், பேன்ட், ஜீன்ஸ் உட்பட ஒரு துணிக்கு ரூ.2-ம் அதுவே வெளியில் இருந்துவரும் போலீஸ்காரர்களுக்கு ரூ.3-க்கும், பொதுமக்களுக்கு ரூ.4-க்கும் அயர்ன் செய்து தருகின்றனர்.

பட்டுப் புடவை என்றால் ரூ.15-ம், காட்டன் சேலைக்கு ரூ.10-ம் வாங்குகின்றனர். 3 கைதிகளும் காலை 7 முதல் இரவு 7 மணி வரை அயர்ன் செய்கின்றனர். ஒரு நாளைக்கு சராசரியாக ரூ.300 வரை வருமானம் கிடைக்கிறது.

இதில் பொதுமக்கள் கொடுப்பதில் மட்டும் ரூ.200 கிடைக்கும். 3 கைதிகளின் உழைப்பில் மாதந் தோறும் குறைந்தது ரூ.9 ஆயிரம் வரை கிடைக்கிறது. சிறை அங் காடி, அயர்னிங் சென்டர் போல பொதுமக்களுக்கு கைதிகள் மூலம் குறைந்த விலையில் ஏதாவது செய்தர முடியும் என்றால் அடுத்தடுத்து செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றார். இந்த புதிய அனுபவம் குறித்து கைதி கர்ணன் கூறும்போது, “கடந்த 16 ஆண்டுகளாக சிறையில் இருக்கிறேன். ஏற்கெனவே சிறைக்குள் அயர்ன் செய்து கொடுக்கும் வேலை செய்து வந்தேன். நீதிமன்றம் செல்லும் கைதிகளின் உடைகளை நாங்கள்தான் அயர்ன் செய்து கொடுப்போம்.

சிறைக்கு வெளியே அயர்னிங் சென்டர் ஆரம்பித்தவுடன் தினமும் வந்து அயர்ன் செய்து கொடுத்து விட்டுச் செல்கிறேன். சிறையின் உள்ளே அடைந்துகிடக்கும் மன நிலை இப்போது இல்லை. இங்கு வந்துசெல்வதால் வெளியாட்களைப் பார்க்கும்போது மனதிலிருந்த பாரத்தை இறக்கிவைத்தாற்போல் உள்ளது.

காலையில் இருந்து மாலை வரை இங்கு இருப்பதால் பொதுமக்களுடன் சேர்ந்திருப்பதுபோல உணர்கிறேன். ஆரம்பத்தில் சின்ன சின்ன தயக்கத்துடன் அயர்ன் செய்ய துணிகளை பையில் எடுத்து வந்தவர்கள், பழகிய சில நாட்களில் ஏதோ சந்தர்ப்ப சூழ்நிலையால் இவர்கள் சிறைக்கு வந்துவிட்டார்கள் என பேசிச் செல்வார்கள். நாங்களும் எல்லோரும்போல் சாதாரணமான மனிதர்கள்தான். இரவு எவ்வளவு அலுப்பாக இருந்தாலும் அடுத்த நாள் காலை இந்த மக்களைப் பார்க்கும்போது மனசு லேசாகிவிடும்” என்றார்.

சிறையில் நன்னடத்தைச் சான்று பெற்றவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு…

சிறை நுழைவு வாயிலில் செயல்படும் அயர்னிங் சென்டரில் பொதுமக்கள் நேரடியாகச் சென்று துணிகளை கொடுக்கின்றனர். இங்கு பணிபுரியும் தண்டனைக் கைதிகள் 3 பேரும் 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருப்பவர்கள். இன்னும் சில மாதங்களிலோ, சில நாட்களிலோ விடுதலையை எதிர்பார்த்து இருப்பதால் தப்பியோடும் முயற்சி என்பது இவர்களிடம் இருக்காது. மேலும், சிறையில் நன்னடத்தைச் சான்று பெற்ற கைதிகளை மட்டுமே இங்கு பணியாற்ற அதிகாரிகள் அனுமதிக்கின்றனர். துணி அயர்னிங் செய்ய வரும் பொதுமக்கள் கைதிகளுடன் பேசத் தடையில்லை. ஆனால் சப்-ஜெயிலர் ஒருவர் அவ்வப்போது கண்காணிப்பார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in