

மழைக்கால நோய்களைத் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குடிசைப் பகுதிகளில் ஆயிரம் இலவச மருத்துவ முகாம்களை நடத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
சென்னை மாநகராட்சியின் பொதுசுகாதாரத் துறை, மழைக்கால நோய்களைத் தடுக்கும் வகையில், சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி, வரும் 26-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை ஆயிரம் சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்துவதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:
ஒவ்வொரு ஆண்டும் சென்னை மாநகராட்சியின் பொதுசுகாதாரத் துறை, மழைக்கால நோய்களைத் தடுக்கும் வகையில், சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்தி வருகிறது. இந்த ஆண்டும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த திட்டமிட்டுள்ளது. மாநகராட்சியின் 15 மண்டலங்களில், 15 மெகா மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளன. மேலும் 200 வார்டுகளில் உள்ள குடிசைப் பகுதிகளில் 985 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடக்க உள்ளன.
வரும் 26-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நடக்கவுள்ள இந்த முகாம்களை ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனை, கீழ்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை உள்ளிட்ட சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்து மாநகராட்சி நடத்துகிறது.
வரும் 26-ம் தேதி மட்டும் 15 மெகா மருத்துவ முகாம்கள் மற்றும் 185 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடக்கின்றன. அதன்பிறகு நாளொன்றுக்கு 200 வார்டுகளிலும் தலா ஒரு முகாம் நடக்க உள்ளது.
இந்த மருத்துவ முகாம்களில் டெங்கு, சிக்குன் குனியா, மலேரியா, வைரஸ் காய்ச்சல், ஆஸ்துமா ஆகிய தொற்று நோய்கள் உள்ளிட்ட மழைக்கால நோய்கள், நீரிழிவு, ரத்த அழுத்தம், இதய நோய் உள்ளிட்ட பொது நோய்களுக்கு பரிசோதனைகளும், சிகிச்சைகளும் அளிக்கப்படும். இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.