Published : 23 Mar 2014 11:31 AM
Last Updated : 23 Mar 2014 11:31 AM

கருணாநிதி சுட்டிக்காட்டுபவர்தான் பிரதமர்: கும்பகோணத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சு

மத்தியில் திமுக தலைவர் கருணாநிதி சுட்டிக்காட்டுபவர்தான் பிரதமராக அமர முடியும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

கும்பகோணம் காந்தி பூங்கா அருகில் சனிக்கிழமை மாலை மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் ஹைதர்அலிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த மு.க. ஸ்டாலின் பேசியது:

திமுகவினர் ஆட்சி பொறுப்பில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் நாட்டு மக்களுக்காக பணியாற்ற கூடியவர்கள். ஆனால் தமிழகத்தில் ஆட்சிபுரியும் ஜெயலலிதா உங்களை தேடி இதுவரை வந்தாரா?. ஆட்சியில் இருந்தால் கோட்டைக்கு செல்வார். ஆட்சியில் இல்லாவிட்டால் கொடநாட்டுக்கு சென்றுவிடுவார். ஆனால், உரிமையோடு நான் உங்களிடம் வாக்கு கேட்க வந்துள்ளேன். பெருவாரியான வாக்கை வேட்பாளர் ஹைதர்அலிக்கு அளித்து வெற்றி பெறச்செய்ய வேண்டும்.

கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழகத்தில் நடப்பது ஆட்சி அல்ல. காணொளி காட்சிதான் நடக்கிறது. மின்வெட்டு பிரச்சினையை 3 மாதத்தில் தீர்ப்பேன் என்றார் ஜெயலலிதா. ஆனால் 3 ஆண்டுகள் ஆகியும் இதுவரை தீரவில்லை. இதுகுறித்து சட்டமன் றத்தில் கேட்டால் ஜூன் மாதத்தில் சரியாகிவிடும், ஆகஸ்டில் பிரச்சினை தீர்த்துவிடும், செப்டம் பரில் வந்துவிடும், ஆண்டு இறுதியில் தீர்வு காணப்படும் என கூறுகின்றனர். ஆனால், மின்வெட்டுக்கு தீர்வுதான் வரவில்லை.

தமிழகத்தில் 5 முறை திமுக ஆட்சி புரிந்தபோது, எத்தனையோ திட்டங்களை செயல்படுத் தியுள்ளது. நெசவாளர்களுக்கு, விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை உருவாக்கி சாதனை படைத்துள்ளார் கருணாநிதி. திமுக ஆட்சியில்தான், கும்பகோணம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் ரூ. 11 கோடியில் கட்டப்பட்டது.

ஜெயலலிதாவுக்கு நல்ல பாடம் புகட்டவும், மத்தியில் மதசார்பற்ற ஆட்சி அமையவும் பொதுமக்கள் ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவு தர வேண்டும் என்றார் ஸ்டாலின். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கோ.சி. மணி, ஜவாஹிருல்லா, நகர பொறுப்பாளர் தமிழழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x