Published : 17 Mar 2017 09:41 AM
Last Updated : 17 Mar 2017 09:41 AM

தமிழக பட்ஜெட் 2017 - 18: கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.7000 கோடி பயிர் கடன்

கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.7000 கோடி பயிர் கடன்

2017-18-ம் ஆண்டில் கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.7 ஆயிரம் கோடி அளவுக்கு புதிய பயிர்க்கடன் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிறு, குறு விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய குறுகியகாலப் பயிர் கடன்களையும், நடுத்தரகால மற்றும் நீண்டகால விவசாய கடன்களையும் தள்ளுபடி செய்துள்ளார். அதன்படி, கடந்த ஆண்டு மார்ச் மாதம் வரையில் செலுத்தப்பட வேண்டிய ரூ.4,893.48 கோடி மூலக் கடனும், ரூ.386.77 கோடி வட்டித் தொகையுமாக, மொத்தம் ரூ.5,280.25 கோடி நிலுவைத் தொகை தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த தொகையை 5 கட்டங்களாக திரும்பச் செலுத்துவதால் ஏற்படும் கூடுதல் வட்டித் தொகை ரூ.760.49 கோடி சேர்த்து மொத்தம் ரூ.6,040.74 கோடி நிதிச்சுமையை அரசு ஏற்றுள்ளது. இதனால், 12.02 லட்சம் விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர். இதில், 1,794.66 கோடி கடந்த ஆண்டில் கூட்டுறவு வங்கிகளுக்கு திரும்பத் செலுத்தப்பட்டது. இதற்காக ரூ.1,830.50 கோடி இந்த பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், 2017-18-ம் ஆண்டில் கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.7 ஆயிரம் கோடி அளவுக்கு பயிர் கடன்கள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

1.96 லட்சம் வீடுகள் கட்ட ரூ.3,502 கோடி நிதி ஒதுக்கீடு

2017-18-ம் ஆண்டில் 1.96 லட்சம் வீடுகள் கட்ட ரூ.3,502.39 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் குடிசைகள் அற்ற கிராமங்களையும், குடிசைப் பகுதிகள் இல்லாத நகரங்களையும் உருவாக்க இந்த அரசு தொடர்ந்து பாடுபடும். பல்வேறு திட்டங்களின் கீழ் கிடைக்கும் நிதியை இணைத்து இந்த இலக்கை அடைய 2016-17-ம் ஆண்டில் ஏழைகளுக்கான வீட்டுவசதி இயக்கத்தை அரசு தொடங்கியுள்ளது. பிரதம மந்திரி வீட்டுவசதித் திட்டத்தின் (ஊரகம்) கீழ் 2016-17-ம் ஆண்டில், தமிழகத்தில் 1.78 லட்சம் வீடுகளைக் கட்ட மத்திய அரசு அனுமதி அளித்து பணிகள் நடைபெற்று வருகின்றன. 2016-17-ம் ஆண்டில் முதலமைச்சரின் சூரிய சக்தி மின்வசதி கொண்ட பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் மேலும் 20 ஆயிரம் வீடுகள் ரூ.420 கோடி செலவில் கட்டப்பட்டு வருகின்றன.

பிரதம மந்திரி வீட்டுவசதித் திட்டத்தின் (ஊரகம்) கீழ் 2017-18-ம் ஆண்டில் வீடு ஒன்றுக்கு ரூ.1.70 லட்சம் மதிப்பீட்டில் 1.76 லட்சம் வீடுகளை இந்த அரசு கட்ட உள்ளது. இதில் வீடு ஒன்றுக்கு மத்திய அரசின் பங்கு ரூ.72 ஆயிரமாகவும், மாநில அரசின் பங்கு கான்கிரீட் கூரை அமைக்க வழங்கப்படும் ரூ.50 ஆயிரம் உட்பட ரூ.98 ஆயிரமாக இருக்கும். எனவே, இந்த திட்டத்துக்கான மொத்த ஒதுக்கீடான ரூ.3,082.39 கோடியில் மாநில அரசின் பங்கு நிதி ரூ.1,761.98 கோடி ஆகும். முதலமைச்சரின் சூரிய சக்தி மின்வசதி கொண்ட பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் 2017-18-ம் ஆண்டில் ரூ.420 கோடி செலவில் 20 ஆயிரம் வீடுகள் கட்டப்படும். 2017-18-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் மொத்தமாக ரூ.3,502.39 கோடி செலவில் 1.96 லட்சம் வீடுகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

மகளிர் ஸ்கூட்டர் திட்டத்துக்கு ரூ.200 கோடி

மகளிருக்கு இருசக்கர வாகன மானியம் வழங்கும் திட்டத்துக்கு பட்ஜெட்டில் ரூ.200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட முன்னோடி திட்டங்களான பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், தொட்டில் குழந்தைகள் திட்டம் ஆகியவை பெண் குழந்தைகளுக்கு உரிய பாதுகாப்பை வழங்கி வருகின்றன. இந்த திட்டங்களுக்கு பட்ஜெட்டில் ரூ.140 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. திருமண உதவி திட்டங்களின் கீழ் மாங்கல்யத்துக்காக 8 கிராம் தங்கம், பட்டதாரி அல்லாத பெண்களுக்கு ரூ.25 ஆயிரம், பட்டப் படிப்பு, டிப்ளமா படிப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டங்களுக்கு ரூ.723 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் ஆண்டுக்கு ஒரு லட்சம் உழைக்கும் பெண்களுக்கு இருசக்கர வாகனங்கள் வாங்குவதற்கு ரூ.20 ஆயிரத்துக்கு மிகாமல் 50 சதவீத மானியம் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்த திட்டத்துக்கு ரூ.200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவு மானியத்துக்கு ரூ.5,500 கோடி

2017-18-ம் ஆண்டில் உணவு மானியத்துக்காக ரூ.5,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் தமிழகத்தில் கடந்த ஆண்டு நவம்பர் 1-ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், அனைத்து மக்களுக்கும் உணவுப் பாதுகாப்பு என்ற தமிழ்நாடு பொது விநியோகத் திட்டத்தின் முக்கிய கொள்கையில் எந்தத் தளர்வும் செய்யாமல் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் துவரம் பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் மானிய விலையில் தொடர்ந்து வழங்கப்படும். 2017-18-ம் ஆண்டுக்கான பட்ஜெட் திட்டமதிப்பீடுகளில் உணவு மானியத்துக்காக ரூ.5,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், சந்தை அளவில் அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொள்வதற்காக விலைக் கட்டுப்பாட்டு நிதியம் ரூ.100 கோடி அளவில் ஏற்கெனவே ஏற்படுத்தப்பட்டுள்ளது. பண்ணைப் பசுமை நுகர்வோர் மையங்கள், அம்மா உணவகம், அம்மா மருந்தகம் மற்றும் அம்மா உப்பு போன்ற பல்வேறு புதுமை முயற்சிகள் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும்.

முதல்வர் காப்பீட்டு திட்டத்துக்கு ரூ.1,348 கோடி ஒதுக்கீடு

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் இந்த அரசின் முன்னோடித் திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ் 1.58 கோடி குடும்பங்கள் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் உயர்தர மருத்துவ வசதிகளைப் பெறும் வகையில் மருத்துவக் காப்பீடு வழங்கப்பட்டுள்ளது. 2016-17-ம் ஆண்டில் ரூ.662.86 கோடி அளவுக்கு 3.39 லட்சம் நோயாளிகள் சிகிச்சைப் பெற்றுள்ளனர். இத்திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனைகள் ரூ.225.28 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

அந்த வருவாய், மருத்துவமனைகளின் உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த காப்பீட்டுத் திட்டம் 2017-ம் ஆண்டு ஜனவரி முதல் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. 312 கூடுதல் சிகிச்சைகள் சேர்க்கப்பட்டு, சிறப்பு சிகிச்சைகளுக்கு ரூ.2 லட்சமாக காப்பீட்டு அளவு உயர்த்தப்பட்டுள்ளது.

2017-18-ம் ஆண்டு வரவு-செலவு திட்ட மதிப்பீடுகளில் இத்திட்டத்துக்கு என்று ரூ.1,348 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மருத்துவ பட்ட மேற்படிப்பு இடங்கள் 1,362 ஆக உயர்வு

மருத்துவ பட்டமேற்படிப்பு இடங்களின் எண்ணிக்கை 1,362 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் கடந்த 6 ஆண்டுகளில் 4 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே இருக்கும் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. போதுமான தகுதி வாய்ந்த டாக்டர்களின் இருப்பு எண்ணிக்கை உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2011-ம் ஆண்டில் 1,945 ஆக இருந்த எம்பிபிஎஸ் இடங்களின் எண்ணிக்கை, 2016-17-ம் ஆண்டில் 2,750 ஆக உயர்ந்துள்ளது. இந்த அரசு எடுத்த முயற்சியின் விளைவாக, 2016-17-ம் ஆண்டில் 1,188 ஆக இருந்த மருத்துவ பட்டமேற்படிப்பு இடங்களின் எண்ணிக்கை 2017-18-ம் ஆண்டில் 1,362 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

7-வது ஊதியக்குழு பரிந்துரைபடி அரசு ஊழியர்களுக்கு புதிய ஊதியம்

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் மகப்பேறு விடுப்பு 6 மாதத்தில் இருந்து 9 மாதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளில் உள்ள அனைத்து கூறுகளையும் ஆய்வுசெய்து அதன் அடிப்படையில் பரிந்துரைகளை வழங்கும் பொருட்டு உயர் அலுவலர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில் திருத்தப்பட்ட ஊதிய விகிதங்கள் நிர்ணயிக்கப்படும்.

புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்த பட்ஜெட்டில் ரூ.290 கோடி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் ஓய்வூதியதாரர்கள் பயன் அடையும் வகையில் இந்த திட்டம் அவர்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் காப்பீட்டுத் தொகை செலுத்துவதற்காக ரூ.123 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதிய பலன்களுக்காக ரூ.22 ஆயிரத்து 394 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

போலீஸாருக்கு ரூ.450 கோடியில் 3 ஆயிரம் வீடுகள் கட்டப்படும்

போலீஸாருக்கு 2017-18-ம் ஆண்டில் ரூ.450 கோடி செலவில் 3 ஆயிரம் வீடுகள் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளதாவது:

2011-ம் ஆண்டிலிருந்து ரூ.1,655 கோடி செலவில் 14,172 வீடுகள் கட்டுவதற்காக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 2017-18-ம் ஆண்டில் ரூ.450 கோடி செலவில் கூடுதலாக 3 ஆயிரம் வீடுகளுக்கான கட்டுமானப் பணிகள் தமிழ்நாடு காவலர் வீட்டு வசதிக் கழகத்தின் மூலம் மேற்கொள்ளப்படும்.

2017-18-ம் ஆண்டில் ரூ.30 கோடி செலவில் கூடுதலாக 49 காவல் நிலையங்களுக்கு கட்டிடங்கள் கட்டித் தருவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படையில் காலியாக உள்ள இடங்களுக்கு மேலும் 10,500 பேரை 2017-18-ம் ஆண்டில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் தேர்வு செய்யும்.

காவல் துறை நவீனமயமாக்கல் திட்டத்துக்காக ரூ.47 கோடியே 91 லட்சம் உட்பட காவல் துறைக்காக ரூ.6,483 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.2016-17-ம் ஆண்டில் 15 நீர் தாங்கி வண்டிகள் மற்றும் 5 சிறிய நுரை தகர்வு வண்டிகள் வாங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. 2017-18-ம் ஆண்டில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கு ரூ.253 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2017-18-ம் ஆண்டு வரவு செலவு திட்ட மதிப்பீடுகளில் சிறைச்சாலைகள் துறைக்கு ரூ.282 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x