Published : 02 Feb 2017 11:38 AM
Last Updated : 02 Feb 2017 11:38 AM

பணமதிப்பு நீக்க விளைவுகளை அறிவிக்காததன் மர்மம் என்ன?- ராமதாஸ் கேள்வி

"பணமதிப்பு நீக்க நடவடிக்கைகளில் வங்கிகள் மூலம் திரும்பப்பெறப்பட்ட பழைய ரூபாய் தாள்களின் மதிப்பு எவ்வளவு? கைப்பற்றப்பட்ட கறுப்புப் பணத்தின் மதிப்பு எவ்வளவு? என்ற விவரங்கள் அடங்கிய வெள்ளை அறிக்கையை மத்திய அரசு வெளியிட வேண்டும்" என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "ஆர்ப்பாட்டத்துடன் தொடங்கிய அணிவகுப்பு பாதி வழியிலேயே அடையாளம் தெரியாமல் மறைந்து போன கதையாக மாறியிருக்கிறது மத்திய அரசின் கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை. மிகப் பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய இந்நடவடிக்கையின் பயன் என்ன? என்பதே மர்மமாக மாறியிருக்கிறது.

கறுப்புப் பணத்தை ஒழிக்கும் நோக்குடன் ரூ.1000 மற்றும் ரூ.500 தாள்கள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி கடந்த நவம்பர் 8ஆம் தேதி அறிவித்தார். மத்திய அரசின் இந்த அதிரடியான முடிவை புரட்சிகரமான நடவடிக்கையாகவே மக்கள் பார்த்தனர். ஆனால், முறையான திட்டமிடுதல் இல்லாத இத்திட்டத்தின் விளைவாக புதிய ரூபாய் தாள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு பணப்புழக்கம் இல்லாத நிலை தான் உருவானதே தவிர, சாதகமான பலன்கள் எதுவும் ஏற்படவில்லை.

மற்றொருபுறம் அரசின் எதிர்பார்ப்புக்கு மாறாக பழைய ரூபாய் தாள்கள் தடையின்றி வங்கிகளில் செலுத்தப்பட்டு வந்தன. கடந்த திசம்பர் 13-ஆம் தேதி வரை ரூ.12.44 லட்சம் கோடி மதிப்புள்ள ரூ.1000, ரூ.500 தாள்கள் திரும்பப் பெறப்பட்டிருப்பதாக ரிசர்வ் வங்கியின் துணை ஆளுனர் காந்தி அறிவித்தார். அப்போதுதான் இந்த திட்டத்தால் எந்த பயனும் ஏற்படப் போவதில்லை என்ற உண்மை பலருக்கும் உறைத்தது.

பணமதிப்பு நீக்க நடவடிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளில் புழக்கத்தில் இருந்த பழைய தாள்களின் மதிப்பு ரூ.14.95 லட்சம் கோடி ஆகும். ரூ.8.25 லட்சம் கோடி மதிப்புள்ள 1650 கோடி 500 ரூபாய் தாள்களும், 6.70 லட்சம் கோடி மதிப்புள்ள 670 கோடி ரூபாய் தாள்களும் இருந்ததாக இந்திய ரிசர்வ் வங்கி அதிகாரிகள் அறிவித்தனர். இதில் சுமார் 3 லட்சம் கோடி ரூபாய் அளவுக்காவது கருப்புப் பணம் இருக்கும். இதைக் கணக்கில் காட்ட எவரும் முன்வர மாட்டார்கள் என்பதால், அதை அரசுக் கணக்கில் சேர்த்து நலத்திட்டங்களுக்காக செலவழிக்கலாம் என ஆட்சியாளர்கள் நினைத்தனர்.

ரூ.3 லட்சம் கோடி அளவுக்கு கருப்புப் பணம் பிடிபட்டால் அது மிகப்பெரிய சாதனையாக இருக்கும் என்பதால் இத்திட்டத்தின் வெற்றி குறித்த அறிவிப்பை ஜனவரி 2-ஆம் தேதி உத்தரப் பிரதேசத்திலுள்ள லக்னோ நகரில் பாரதிய ஜனதாக் கட்சியின் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் வெளியிட பிரதமர் மோடி திட்டமிட்டிருந்தார்.

ஆனால், டிசம்பர் 13-ஆம் தேதியே பழைய ரூபாய் தாள்களில் 83.20 விழுக்காடு திரும்பி வந்து விட்டதாலும், இவை தவிர ரிசர்வ் வங்கியில் ரூ.4 லட்சம் கோடிக்கு மேல் பழைய ரூபாய் தாள்கள் இருப்பதாக கூறப்படுவதாலும் பணமதிப்பு நீக்கம் சிக்கலில் தங்களின் நடவடிக்கையை நியாயப்படுத்த முடியாமல் ஆட்சியாளர்கள் தவித்தனர். தங்கள் செயலை நியாயப்படுத்தும் வகையில், பழைய ரூபாய் தாள்களின் மதிப்பு ரூ.15.44 லட்சம் கோடி என்றும், ரூ.20.51 லட்சம் கோடி என்றும் மாற்றி மாற்றி பேசினார். ஆனால், இது எடுபடாத நிலையில், வங்கிக் கணக்குகளை மீண்டும் ஒருமுறை சரிபார்த்து திரும்பப் பெறப்பட்ட பழைய தாள்களின் மதிப்பு அறிவிக்கப்படும் என்று அரசு தெரிவித்தது.

பணமதிப்பு நீக்க நடவடிக்கையின்படி திரும்பப்பெறப்பட்ட பழைய தாள்களின் மதிப்பு எவ்வளவு? வங்கிகள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட புதிய ரூபாய் தாள்களின் மதிப்பு எவ்வளவு? என்பதை கடந்த ஜனவரி 2-ஆம் தேதியே மத்திய அரசோ, ரிசர்வ் வங்கியோ அறிவித்திருக்க வேண்டும். ஆனால், அதன்பின் ஒரு மாதம் நிறைவடைந்து பிப்ரவரி 2-ஆம் தேதியும் வந்து விட்ட நிலையில், இன்று வரை அந்த விவரங்கள் வெளியிடப்படவில்லை. மத்திய அரசின் சார்பில் ஆண்டுதோறும் வெளியிடப்படும் இரு முக்கிய பொருளாதார ஆவணங்களான பொருளாதார ஆய்வறிக்கையும், மத்திய நிதிநிலை அறிக்கையும் முறையே ஜனவரி 31, பிப்ரவரி 1 ஆகிய தேதிகளில் வெளியிடப்பட்டு விட்டன. பணமதிப்பு நீக்கம் குறித்த விவரங்கள் இந்த ஆவணங்களில் இடம் பெற்றிருக்கும் என்று இந்நாட்டு மக்களைப் போலவே நானும் நம்பினேன். ஆனால், அரசுத் தரப்பிலிருந்து ஏமாற்றமே பரிசாக கிடைத்தது.

பணமதிப்பு நீக்க நடவடிக்கை குறித்த விவரங்களை அதிகபட்சமாக ஒரு மணி நேரத்தில் திரட்டி விட முடியும். மதிப்பிழக்க வைக்கப்பட்ட பணத்தை மாற்றும் நடைமுறையின் போது நவம்பர் 10-ஆம் தேதி முதல் டிசம்பர் 13-ஆம் தேதி வரை இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை வங்கிகளுக்கு பழைய பணம் எவ்வளவு வந்தது? புதிய ரூபாய் தாள்கள் எவ்வளவு விநியோகிக்கப்பட்டன? என்பது குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டன. டிசம்பர் 13-ஆம் தேதிக்குப் பிறகு இந்த விவரங்களை வெளியிடாததன் மர்மம் என்ன? பொருளாதார ஆய்வறிக்கை, மத்திய நிதிநிலை அறிக்கை ஆகியவற்றில் இவ்விவரங்களை வெளியிடாதது ஏன்? என்பன உள்ளிட்ட வினாக்களுக்கு அரசிடமிருந்து இன்னும் பதில் கிடைக்கவில்லை.

மாறாக ரூ.1000, ரூ.500 தாள்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதன் நோக்கமே பணமில்லாத பரிமாற்றத்தை ஊக்குவிப்பதற்காகத் தான் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த மத்திய அரசு முயல்கிறது. இதுபோன்ற திசை திருப்பும் வேலைகளை கைவிட்டு, பணமதிப்பு நீக்க நடவடிக்கைகளில் வங்கிகள் மூலம் திரும்பப்பெறப்பட்ட பழைய ரூபாய் தாள்களின் மதிப்பு எவ்வளவு? கைப்பற்றப்பட்ட கறுப்புப் பணத்தின் மதிப்பு எவ்வளவு? என்ற விவரங்கள் அடங்கிய வெள்ளை அறிக்கையை மத்திய அரசு வெளியிட வேண்டும்.

அத்துடன் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை மீட்க என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன? என்பதையும் அரசு விளக்க வேண்டும்" என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x