

ஹுண்டாய் கார் தொழிற்சாலையில் ரோபோக்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கப்பட்டு, தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு வருகிறது. இது மட்டுமின்றி, வரிச் சலுகைக்காக வேறு மாநிலத்துக்கு ஆலை இடம்பெயரக்கூடும் என்றும் கருதப்படுவதால் வேலை பறிபோய் விடுமோ என்ற அச்சத்தில் தொழிலாளர்கள் உள்ளனர்.
நோக்கியா தொடங்கிவைத்த பீதி
சென்னை அடுத்த ஸ்ரீபெரும் புதூரில் நோக்கியா ஆலை கடந்த 2006-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்தது. சர்வதேச அளவில் இது மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு கைமாறியதைத் தொடர்ந்து, கடந்த 1-ம் தேதி ஆலை மூடப்பட்டது. இதில் கடைசியாக வேலை பார்த்துவந்த 150 பெண்கள் உட்பட 851 ஊழியர்கள் தற்போது நஷ்டஈடுத் தொகையைப் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் பிற நிறுவனங்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் மத்தியிலும் வேலையிழப்பு குறித்த அச்சம் பரவியுள்ளது.
ஹுண்டாய் நிறுவனம் தமிழகத்தில் தொழில் நடத்த 15 ஆண்டு காலத்துக்கு வரிச் சலுகை அறிவிக்கப்பட்டது. 15 ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில், ஹுண்டாய் நிறுவனம் தமிழகத்தில் உற்பத்தியை தொடருமா அல்லது தமிழகத்தைவிட நிறைய சலுகைகள் கிடைக்கக்கூடிய ஆந்திர மாநிலத்துக்குச் செல்லுமா என்று தொழிலாளர்கள் அஞ்சுகின்றனர்.
ஆட்களை விரட்டும் ரோபோக்கள்
ஹுண்டாய் நிறுவனத்தில் 15 ஆண்டுகளாக வேலை பார்க்கும் தொழிலாளர் ஒருவர் கூறும்போது, ‘‘நாங்கள் வேலையில் சேரும்போது இங்கு 8 ரோபோக்கள் மட்டுமே இருந்தன. இப்போது 200 ரோபோக்கள் உள்ளன. அவை வர வர, ஆட்களைக் குறைக்கிறார்கள். முதல் பிளான்ட் தொடங்கி 15 ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில், நிறுவனத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்குமோ என்று பயமாக இருக்கிறது’’ என்றார்.
இதுபற்றி ஹுண்டாய் மோட்டார் இந்தியா ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் தரன் கூறும்போது, ‘‘நிறுவனம் தொடங்கும்போது 5 ஆயிரம் பேரை எடுப்பதாகக் கூறி 2500 நிரந்தர ஊழியர்களை எடுத்தனர். தற்போது 1500 நிரந்தர ஊழியர்கள் மட்டுமே உள்ளனர். மற்ற 9 ஆயிரம் பேரும் ஒப்பந்த தொழிலாளர்கள். இவர்களுக்கு ரூ.3 ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ.7 ஆயிரம்தான் சம்பளம்’’ என்றார்.
இதுகுறித்து சிஐடியூ மாநிலத் தலைவர் அ.சவுந்தரராஜன் கூறியதாவது:
ஆந்திராவை இரண்டாக பிரித்த பிறகு, தொழில் நிறுவனங்கள் அதிகம் கொண்ட ஹைதராபாத் நகரம் தெலங்கானாவுக்கு சொந்தமாகிவிட்டது. தற்போது ஆந்திராவில் தொழிற்சாலைகளை அதிகரிப்பதற்காக முதல்வர் சந்திரபாபு நாயுடு ஒரு ரூபாய்க்கு ஒரு ஏக்கர் நிலம் தருவதாகக் கூறி முதலீட்டாளர்களை அழைக்கிறார். 1998-ல் தொடங்கப்பட்ட ஹுண்டாய் நிறுவனத்தின் வரிச் சலுகைக் காலம் முடிந்துவிட்ட சூழலில் அந்நிறுவனமும் ஆந்திராவுக்குச் சென்றுவிடக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே ஃபோர்டு நிறுவனம் தமிழகத்தில் இருந்து குஜராத் செல்லப்போவதாக கூறப்படுகிறது.
வரிச் சலுகைக்காக இடம்பெயர்வதா?
இப்படி ஒரு மாநிலத்தில் 10 அல்லது 15 ஆண்டுகள் சலுகை களை அனுபவித்த நிறுவனங்கள், மீண்டும் புதிதாக சலுகைகள் பெறுவதற்காக வேறு மாநிலங்களுக்கு இடம்பெயர் வதை தடை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிலாளர்களை பாதிக்கக்கூடிய இதுபோன்ற செயல்பாடுகளை தடுக்க வேண்டும்.
இவ்வாறு சவுந்தரராஜன் கூறினார்.
சிஐடியூ மாநில துணைத் தலைவர் எஸ்.கண்ணன் கூறும் போது, ‘‘பன்னாட்டு நிறுவனங்கள் வெவ்வேறு மாநிலங்களில் வரிச் சலுகை பெற அனுமதிப்பது மாநிலங்கள் இடையே போட்டி மனப்பான்மையை உருவாக்கும். இது கார்ப்பரேட் நிறுவனங்களுக்குதான் சாதகமாக அமையும்’’ என்றார்.