

விருத்தாசலம் வரை..
சேலம்- விருத்தாசலத்துக்கு இடையில் கொள்ளை நடந்திருக்கலாம் என போலீஸார் சந்தேகம் அடைந்திருப்பதோடு, கொள்ளையர்கள் ரயிலில் இருந்து ஏதேனும் ஆயுதங்கள், தளவாடங்கள், பணக்கட்டு ஆகியவற்றை வழியில் வீசிச் சென்றுள்ளார்களா என்பது குறித்து சேலம் ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் நேற்று காலை சேலம் - விருத்தாசலத்துக்கு இடையேயான ரயில் பாதையில் டிராலியில் சென்று சோதனை நடத்தினர்.
9 போலீஸார் பாதுகாப்பு
கொள்ளை நடந்த ரயிலில் பணப் பாதுகாப்புக்காக உதவி கமிஷனர் நாகராஜன், இன்ஸ்பெக்டர் கோபி, எஸ்ஐ ஆனந்த், தலைமை காவலர்கள் கோவிந்தராஜன், சுப்ரமணியன், காவலர்கள் கணேஷ், பெருமாள், செந்தில், ரமேஷ் ஆகிய 9 பேர் இருந்துள்ளனர். இவர்களிடம் 2 பிஸ்டல், ஏ.கே 47 வகை 2 துப்பாக்கி, இன்சாஸ் வகை துப்பாக்கி 2, எஸ்எல்ஆர் வகை துப்பாக்கி 2 இருந்துள்ளன. உதவி கமிஷனர் நாகராஜன் எச்ஏ1 என்ற ரயில் பெட்டியில் முன்பதிவு செய்து சென்றுள்ளார். மற்றவர்கள் எஸ்1 பெட்டியில் பயணம் செய்துள்ளனர். பணம் இருந்த ரயில் பெட்டிக்கும் இவர்களுக்கும் 3 பெட்டி இடைவெளி இருந்துள்ளது.
5 வங்கிகளின் பணம்
ரயிலில் கொண்டு செல்லப்பட்ட ரூ.342.75 கோடியை 226 பெட்டிகளில் அடுக்கி வைத்துள்ளனர். இவற்றில் சேலம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையின் பணம் 83 பெட்டிகளிலும், சேலம் இந்தியன் வங்கி கிளை பணம் 43 பெட்டிகளிலும், ராசிபுரம் ஸ்டேட் வங்கி பணம் 42 பெட்டிகளிலும், கிருஷ்ணகிரியில் உள்ள இந்தியன் வங்கி பணம் 38 பெட்டிகளிலும், சத்தியமங்கலம் ஸ்டேட் வங்கி பணம் 20 பெட்டிகளிலும் அடுக்கி வைக்கப்பட்டிருந்துள்ளன.
புதுவகையான வழக்கு
ரயில் பெட்டியில் ஆய்வை முடித்துவிட்டு தடய அறிவியல் துறை துணை இயக்குநர் ஜமுனா அளித்த பேட்டி:
எங்களுக்கு இது புதுவகையான வழக்கு. இதுபோல் இதுவரை நடந்தது இல்லை. நாங்கள் சேகரித்த தடயங்களை ஆய்வு செய்து அதன் விவரத்தை நீதிமன்றத்தில் தெரிவிப்போம். ரயில் பெட்டியை உடைத்த பின்னர் கொள்ளையர்கள் கயிறு கட்டி உள்ளே இறங்கினார்களா என்ற விவரம் தெரியவில்லை என்று தெரிவித்தார்.
150 கிலோ பணம்
ரயிலில் கொள்ளையடிக்கப்பட்ட ரூ.5 கோடியே 75 லட்சம் பணத்தின் மொத்த எடை 150 கிலோ வரை இருக்கும் என வங்கி அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு எடையை ஒருவரால் சுமந்து செல்ல முடியாது. சூட்கேஸிலும் அடைத்து எடுத்துச் செல்ல முடியாது. எனவே, கொள்ளை நடந்த விதத்தை பார்த்தால் 5 அல்லது அதற்கு மேற்பட்டவர்களே கைவரிசை காட்டியிருக்க வேண்டும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்ஜின் மாற்ற 20 நிமிடம்
சேலத்தில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்ட சேலம் விரைவு ரயில் விருத்தாசலம் வரை டீசல் இன்ஜின் மூலம் இயக்கப்பட்டுள்ளது. விருத்தாசலம் வந்த பின்னர், அங்கு 20 நிமிடங்கள் மின்சாரம் இன்ஜின் பொருத்துவதற்காக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நேரத்தை பயன்படுத்தி கொள்ளையர்கள் கைவரிசை காட்டினார்களா என்று விசாரிக்கப்பட்டு வருகிறது. இது ஒருபுறம் இருக்க சேலம், கடலூர், விழுப்புரம், அரியலூர் மாவட்டங்களை சேர்ந்த முக்கிய குற்றவாளிகளின் பட்டியலை போலீஸார் சேகரித்துள்ளனர். இவர்கள் ரயில் கொள்ளையில் ஈடுபட்டார்களா என்றும் விசாரிக்கப்பட்டு வருகிறது.