Published : 02 Mar 2014 11:50 AM
Last Updated : 02 Mar 2014 11:50 AM

பெண் டாக்டருக்கு முகநூலில் காதல் தொல்லை: சேலம் மருத்துவக் கல்லூரி பேராசிரியர் கைது

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் டாக்டருக்கு, முகநூலில் காதல் வசனங்கள் எழுதி தொல்லை கொடுத்து வந்த சேலம் அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியரை மகளிர் போலீஸார் கைது செய்தனர்.

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருபவர் செந்தில்குமார் (46). குழந்தைகள் சிறப்பு மருத்துவராக உள்ளார்.

மனைவியுடன் விவாகரத்து

சேலம் மாவட்டம் தலைவாசலைச் சேர்ந்த இவர் ராசிபுரத்தில் தங்கியிருக்கிறார். இவருக்குத் திருமணாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். தனியார் வங்கியில் அதிகாரியாக உள்ள இவரது மனைவி, கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றார்.

மாணவியுடன் பழக்கம்

இந்நிலையில் சேலம் அரசு குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரியில் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு மாணவி படித்து வந்தார். அப்போது, குழந்தைகள் நலம் குறித்து பாடம் எடுத்து வந்த உதவி பேராசிரியர் செந்தில்குமார், அந்த மாணவியுடன் பழக்கம் ஏற்படுத்திக்கொண்டார்.

தற்போது, அந்த மாணவி மருத்துவம் முடித்துவிட்டு கேரள மாநிலம் கோழிக்கோட்டில் மகப்பேறு சிறப்பு மருத்துவம் படித்து வருகிறார். இந்நிலையில், செந்தில்குமார் பெண் டாக்டருக்கு முகநூல், அலைபேசி வழியாக காதல் வசனங்களை எழுதி காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி தொல்லை கொடுத்து வந்துள்ளார். பல முறை அவர் கண்டித்தும் டாக்டர் செந்தில்குமார் கேட்கவில்லை.

பெண் டாக்டர் புகார்

இந்நிலையில், சேலம் சைபர் கிரைம் பிரிவில் செந்தில்குமார் மீது பெண் டாக்டர் புகார் அளித்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் சேலம் காவல் துறை துணை ஆணையர் பிரபாகரன் விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதன்படி, சேலம் டவுன் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து செந்தில்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x