Published : 03 Dec 2013 12:00 AM
Last Updated : 03 Dec 2013 12:00 AM

கூடங்குளம் மின் உற்பத்தி நிறுத்தம்

கூடங்குளம் அணுமின் நிலையத்தில், முதலாவது அணு உலையில் மின் உற்பத்தி, 57 நாட்களுக்குப் பின் திங்கள்கிழமை நிறுத்தப்பட்டது. செயல்பாடு ஆய்வுக்குப் பின், 2 அல்லது 3 நாட்களில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கும் என அணுமின் நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில், முதலாவது அணு உலையில் கடந்த அக்டோபர் மாதம் 22-ம் தேதி அதிகாலை 2.45 மணிக்கு, 160 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு மின்தொகுப்பில் இணைக்கப்பட்டிருந்தது.

பின்னர் அதிகாலை 5.45 மணிக்கு டர்பைன் இயக்கம் நிறுத்தப்பட்டதால், மின் உற்பத்தியும் நடைபெறவில்லை. தொடர்ந்து பல்வேறு நிலைகளாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. ரஷ்ய விஞ்ஞானிகளுடன், இந்திய அணுமின் கழக விஞ்ஞானிகளும் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இந்த ஆய்வுகளை தொடர்ந்து அணுசக்தி ஒழுங்கமைப்பு வாரியத்தின் ஒப்புதலின் அடிப்படையில், அக்டோபர் மாதம் 25-ம் தேதி இரவு, 9.43 மணிக்கு 2-வது முறையாக டர்பைன் இயக்கப்பட்டு மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்பட்டது. தொடர்ந்து 29-ம் தேதி இரவு 8 மணியளவில் மின் உற்பத்தி 300 மெகாவாட்டை தாண்டியதும் டர்பைன் இயக்கம் படிப்படியாக நிறுத்தப்பட்டது.

தொடர்ந்து பல்வேறு கட்ட ஆய்வுகளை விஞ்ஞானிகள் மேற்கொண்டனர். இந்த ஆய்வுகள் திருப்தி அளித்ததைத் தொடர்ந்து, அணுசக்தி ஒழுங்கமைப்பு வாரியத்தின் அனுமதியுடன், 3-வது முறையாக கடந்த நவம்பர் 4-ம் தேதி மாலை 4.11 மணிக்கு மீண்டும் மின் உற்பத்தி செய்யப்பட்டு மத்திய மின்தொகுப்பில் இணைக்கப்பட்டது.

இந்த மின் உற்பத்தி, 400 மெகாவாட்டை தாண்டி, 500 மெகாவாட்டை எட்டுமுன் மீண்டும் டர்பைன் இயக்கம் நிறுத்தப்பட்டு ஆய்வுகள் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அடுத்த நாள் 5-ம் தேதி காலை 11.30 மணிக்கு, 230 மெகாவாட் மின் உற்பத்தியை எட்டியபோது டர்பைன் இயக்கம் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், 4-வது முறையாக கடந்த 10-ம் தேதி அதிகாலை 1.30 மணியளவில் 60 மெகாவாட் வரையில் மின் உற்பத்தி மீண்டும் செய்யப்பட்டு மத்திய மின்தொகுப்பில் இணைக்கப்பட்டது. தொடர்ந்து 23 நாட்களாக மின் உற்பத்தி செய்யப்பட்டு மத்திய மின் தொகுப்பில் இணைக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், திங்கள்கிழமை நண்பகல் 12.42 மணியளவில் மின் உற்பத்தி 400 மெகாவாட் அளவில் இருந்தபோது டர்பைன் இயக்கம் படிப்படியாக நிறுத்தப்பட்டதுடன், அணுஉலை செயல்பாடும் நிறுத்தப்பட்டது. ஆய்வுக்காக இவ்வாறு அணு உலையின் செயல்பாடு நிறுத்தப்பட்டதாக அணுமின் நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

இன்னும் 2 அல்லது 3 நாள்களில் மீண்டும் அணுஉலையின் செயல்பாடு தொடங்கப்பட்டு மின் உற்பத்தி தொடங்கும் என்று அணு உலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x