Published : 30 Dec 2013 08:31 PM
Last Updated : 30 Dec 2013 08:31 PM

நாகர்கோவில்: குழந்தை குட்டிகளுடன் எங்கே போவோம்?
குடிசைவாசிகள் கண்ணீர், அதிகாரிகள் கறார்

நீர் நிலைகளைக் காப்போம் என்ற முழக்கத்துடன், ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிரடியாகக் களமிறங்கியுள்ளது கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம். இது அவசியம் என்றாலும், வளர்த்த கடா திடீரென மார்பில் பாய்ந்தால், எங்கள் வாழ்வாதாரமே சிதைந்து விடுமே என்று பதறுகின்றனர் பரிதாபத்திற்குரிய ஏழை மக்கள்.

கன்னியாகுமரி மாவட்டம் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டது. நீர் ஆதாரங்கள் பாழ்பட்டு வரும் நிலையில், மாவட்ட நிர்வாகம், தற்போது அவற்றைப் பாதுகாக்க களமிறங்கியுள்ளது.

குடிசைவாசிகள் கலக்கம்

சில தினங்களுக்கு முன்பு நாகர்கோவில் செம்மாங்குளத்தைப் பார்வையிட்ட அதிகாரிகள், அங்கிருந்த வீடுகளை காலி செய்ய அறிவுறுத்தினர். அதைத்தொடர்ந்து தற்போது அப்பகுதியில் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாகர்கோவில் செட்டிகுளத்தில் உள்ள பூச்சான்குளம் ஆக்கிரமிப்புகளை ஜனவரி 3-ம் தேதியும், ஒழுகினசேரி சபையார்குளம் ஆக்கிரமிப்பை 10-ம் தேதியும், வடசேரி சுப்பையார் குளம் ஆக்கிரமிப்பை 17-ம் தேதியும், புத்தேரி பெரியகுளம், முரிக்குளம் ஆக்கிரமிப்புகளை 24-ம் தேதியும், வடிவீஸ்வரம் நுள்ளிகுளம் ஆக்கிரமிப்பை 31-ம் தேதியும், வடசேரி பெருமாள் குளம் ஆக்கிரமிப்பை பிப்ரவரி 7-ம் தேதியும், ராதாபுரம் சானலுக்கு உட்பட்ட பகுதிகளை பிப்ரவரி 14-ம் தேதியும் அகற்ற இருப்பதாக அறிவித்துள்ளதுதான் குடிசை வாசிகளை கலக்கமடையச் செய்துள்ளது.

500 வீடுகள் காலியாகும்

9-வது வார்டு கவுன்சிலர் நாகராஜன் கூறியதாவது:

செம்மாங்குளம் பகுதியில் கட்டபொம்மன் தெரு, காந்தாரி அம்மன் கோவில் தெருவில் உள்ள வீடுகளில் சில இடிக்கப்பட உள்ளன. பொதுப்பணித் துறை அதிகாரிகள் கடந்த 20-ம் தேதி திடீரென வந்து வெறும் 8 நாள்கள் மட்டுமே அவகாசம் கொடுத்து வீட்டைக் காலி செய்ய அறிவுறுத்தினர். மின் இணைப்பையும் துண்டித்து விட்டனர்.

செம்மாங்குளம் தொடர்பாக கடந்த ஆண்டு, தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் கேட்ட போது, குளத்தை தூர்வார போதிய நிதி ஆதாரம் இல்லை என தகவல் கொடுத்தார்கள். நிதி ஆதாரம் இல்லாத நிலையில் அப்பாவி மக்களை அவசர, அவசரமாக காலி செய்யச் சொல்வது எந்த விதத்தில் நியாயம்.

செம்மாங்குளத்தில் 35 வீடுகள், செட்டிக்குளம் பூச்சாத்தான் குளத்தில் 185-க்கும் மேற்பட்ட வீடுகள் காலியாகும் வாய்ப்புள்ளது. பொதுப்பணித் துறை கொடுத்துள்ள அறிக்கையை பார்த்தால் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் காலியாகும் நிலை உள்ளது.

வளர்த்த கடா பாய்கிறது

செம்மாங்குளத்தில் அரசு ஆக்கிரமிப்பு என்று கணக்கு காட்டும் வீடுகளில் அந்த மக்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறார்கள். அந்த வீடுகளுக்கு மின் இணைப்பு, சாலை வசதி, பிரத்யேக குடிநீர் தொட்டி போன்றவற்றை அரசு தான் ஏற்படுத்தி கொடுத்தது. இப்போது திடீரென வெளியேறச் சொன்னால் எங்கே செல்வார்கள், என்றார்.

பாதிக்கப்பட்ட மூதாட்டி காளியம்மாள் கூறுகையில், குருவி சேர்க்குற மாதிரி கஷ்டப்பட்டு காசு சேர்த்து இப்போ தான் வீட்டுக்கு கரன்ட் இழுத்தோம். மீட்டர் பெட்டி வந்த 2 நாளுக்குள் மின்சாரத்தை துண்டித்துவிட்டார்கள், என்றார். மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், சிலர் அவர்களது ஓட்டு வீடுகளின் மேற்கூரையை பிரித்து விற்பனை செய்து விட்டு, வேறு வீடு தேடிக்கொண்டிருக்கின்றனர்.

மாற்று இடம் வேண்டும்

மக்களவைத் தேர்தல் நெருக்கும் நிலையில், குடிசை வாசிகளின் ஓட்டு உடைபட்டு விடுமோ என்ற பயம் அ.தி.மு.க.வினருக்கு ஏற்பட்டுள்ளது. அமைச்சர் பச்சைமால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டார். நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் நாஞ்சில் முருகேசன் ஞாயிற்றுக்கிழமை பூச்சாந்தான்குளம் பகுதி மக்களை சந்தித்து ஆறுதல் கூறிவிட்டுச் சென்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வட்டாரக் குழு செயலாளர் அந்தோணி கூறுகையில், நீர் நிலைகளைக் காப்பது அவசியமான ஒன்று தான். அதே நேரத்தில் ஏழை மக்களின் நலனையும் கருத்தில் கொள்ள வேண்டும். அவர்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும், என்றார்.

பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் தன்ராஜ் கூறுகையில், நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக, கடந்த 2007-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் ஒரு உத்தரவு பிறப்பித்தது. அதைத் தான் பின்பற்றியுள்ளோம். கடந்த 2007 முதலே ஒவ்வொரு ஆண்டும் சம்பந்தப்பட்ட பகுதி மக்களுக்கு நோட்டீஸ் கொடுத்து வருகிறோம். ஆனால் அவர்கள் காலி செய்யவில்லை. அதைத் தொடர்ந்து தான் தற்போது தேதி அறிவித்துள்ளோம், என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x