

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் அரங்கநாயகத்துக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1991 முதல் 1996 வரை..
தமிழக அமைச்சராக கடந்த 1991 முதல் 1996 வரை பதவி வகித்தவர் செ.அரங்கநாயகம். இவரது பதவிக்காலத்தில் தனது பெயரிலும், தனது மனைவி கலைச்செல்வி மற்றும் மகன்கள் சந்தானபாண்டியன், முருகன் அதியமான் ஆகியோரது பெயரிலும் வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.15 கோடி சொத்து குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த 2006-ம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப் பட்டது.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கின் மீதான தீர்ப்பை ஊழல் வழக்குகளை விசாரிக்கும் தனி நீதிமன்ற நீதிபதி எம்.கோமதிநாயகம் நேற்று வழங் கினார். வழக்கின் முதல் குற்ற வாளியான முன்னாள் அமைச்சர் சி.அரங்கநாயகத்துக்கு 3 ஆண்டு கள் சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அமைச்சரின் மனைவி மற்றும் அவரது இரு மகன்களையும் நீதிபதி விடுதலை செய்தார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக அரங்கநாயகம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து ரூ.25 ஆயிரம் மற்றும் அதே தொகைக்கான இரு நபர் உத்தரவாதத்தின் பேரில் அவருக்கு ஜாமீன் வழங்கப் பட்டது.
அரங்கநாயகம் அமைச்சராக பதவி வகித்த காலத்தில் வருமானத் துக்கு அதிகமாக சேர்த்த சொத்தை பறிமுதல் செய்ய அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டு உள்ளார்.