

தமுக்கத்தில் நடந்து வந்த இந்தப் போராட்டத்துக்கு வாட்ஸ் அப் மூலம் வித்திட்டவர், உக்ரைனில் வசிக்கும் தமிழ் மாணவர் என்ற தகவல் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி மதுரை தமுக்கம் பகுதியில் போராட்டம் நடத்தி வந்த இளைஞர்கள் போராட்ட வியூகத்தை மாற்றி, நிரந்தரச் சட்டம் வேண்டும் என வலியுறுத்தி போராடத் தொடங்கினர். போலீஸாரின் 12 மணி நேரப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் போராட்டம் முடிவுக்கு வந்தது. அதன் விவரம் >> 12 மணிநேர பேச்சுக்கு பின் முடிவுக்கு வந்த மதுரை தமுக்கம் போராட்டம்
தமுக்கத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு முதல் மாணவர்கள், பேராசிரியர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் ஆயிரக்கணக்கில் ஒன்று திரண்டு போராடி வந்தனர்.
ஒட்டுமொத்த மதுரையையுமே ஈர்த்த இந்தப் போராட்டத்துக்கு வித்திட்டதும், ஒருங்கிணைக்க உதவியதும் வாட்ஸ் அப்பில் வந்த குறுந்தகவல் ஒன்றுதான் என்பது தெரியவந்தது.
உக்ரைனில் இருந்தபடி தமிழ் பொறியியல் மாணவர் ஒருவர் தட்டிவிட்ட வாட்ஸ் அப் குறுந்தகவல் ஒன்றுதான் அது என்பதும் தெரியவந்துள்ளது. அந்த மாணவரின் சொந்த ஊர் அவனியாபுரம்.
"அந்த வாட்ஸ் அப் குறுந்தகவலை உருவாக்கி வெளியிட்டது குறித்து தீவிரமாக விசாரித்தபோது, அந்த மாணவரை அடையாளம் கண்டோம். அவரிடம் விசாரித்தபோது, 'மிக எளிதாக அதைச் செய்து முடித்தேன்' என்று அவர் விளக்கம் தந்தார்" என்று துணை ஆணையர் ஏஜி.பாபு தெரிவித்தார்.