Published : 04 Feb 2014 12:00 AM
Last Updated : 04 Feb 2014 12:00 AM

ரத்த வகையைக் கண்டறிவதில் அலட்சியம் காட்டும் ரத்த வங்கிகள்

ரத்த வகையைக் கண்டறிவதில் அண்மைக்காலமாக ரத்த வங்கிகள் அலட்சியம் காட்டுவதாகப் புகார் கள் எழுந்துள்ளன.

மருத்துவ மற்றும் விஞ்ஞான வளர்ச்சியின் பலனாக நம் உடலிலிருந்து ரத்த மாதிரியைச் சேகரித்த சிலமணித் துளிகளிலேயே ரத்த வகையை நாம் அறிந்துகொள்ளும் விதமாக தொழில்நுட்ப உபகரணங்கள் தற்போது வந்துவிட்டன. விபத்தாலோ அல்லது அறுவை சிகிச்சை செய்யும் நேரத்திலோ அல்லது பிரசவத்தின்போதோ ஒருவருக்கு ரத்தப்போக்கு அல்லது ரத்த இழப்பு அதிகமாக இருந்தால், அவர்களுக்கு உயிர்காக்கும் பொருட்டு ரத்தம் தேவைப்படும்.

அச்சப்பட வைக்கும் சம்பவங்கள்

ரத்த தானம் அளிப்பது குறித்த விழிப்புணர்வு தற்போது அதிகரித்துள்ளது. உயிர் காக்கும் இந்த ரத்த தானத்தை இளைஞர்கள் பலரும் எவ்வித பிரதிபலனும் பாராமல் மனமுவந்து செய்து வருகின்றனர்.

ஆனால், ரத்தம் பெறும் ரத்த வங்கிகள் மற்றும் ரத்த வகையைக் கண்டறியும் ரத்தப் பரிசோதனை மையங்கள் இதில் முழு கவனத்தோடு செயல்படவில்லையோ என்று அச்சப்பட வைத்துள்ளன சில சம்பவங்கள்.

உதாரணமாக திருச்சியைச் சேர்ந்தவரின் உண்மையான ரத்த வகை ‘பி பாஸிட்டிவ்’. ஒரே ஆண்டில் இரு முறை திருச்சியில் உள்ள ஒரு பிரபல ரத்த வங்கி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் ரத்த தானம் செய்துள்ளார். அவருக்கு அந்த மையம் வழங்கிய சான்றிதழ்களில் ஒன்றில் ‘பி பாஸிட்டிவ்’ என்றும் மற்றொன்றில் ‘ஏ1 பாஸிட்டிவ்’ என்றும் ரத்த வகை குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோன்று நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையிலிருந்து வந்த இளைஞர் ஒருவர் ‘ஏ1 பாஸிட்டிவ்’ ரத்த வகை கொண்டவர். இவர் திருச்சியில் உள்ள ஒரு பிரபல மருத்துவப் பரிசோதனை மையத்தில் தனது ரத்த வகையைப் பரிசோதனை செய்தபோது ‘ஏ பாஸிட்டிவ்’ என சான்றிதழ் அளித்துள்ளனர்.

நம் கவனத்துக்கு வந்த மேற்காணும் இரு சம்பவங் களிலுமே, தொடர்புடை யவர்கள் ரத்த வகையைப் பார்த்துவிட்டு சந்தேகப்பட்டு கேள்வி எழுப்பியபோது, மீண்டும் ரத்தப் பரிசோதனையை செய்து, சரியான சான்றிதழை அளித்துள்ளன இந்த மையங்கள். ரத்தப் பரிசோதனை செய்த ஓர் நபருக்கு எச்ஐவி பாசிடிவ் என தவறாகக் குறிப்பிட்டதால் அந்த பரிசோதனை மையம் அடித்து நொறுக்கப்பட்ட சம்பவங்களும் இதுபோன்ற தவறால் நேரிட்டுள்ளன.

ரத்த வங்கியின் பதில்...

இதுகுறித்து திருச்சியிலுள்ள ஓர் ரத்த வங்கியின் கண்காணிப்பாளர் முரளி கூறியது: “ரத்த வகையைக் குறிப்பிட்டுச் சான்றிதழை நிரப்பி அளிக்கும் பணியில் இருந்தவர் கவனக்குறைவாக செயல்பட்டிருக்கலாம்.

ரத்த வகை கண்டறிவதில் எந்தப் பிழையும் நேராது. அதேபோன்று யாருக்கு ரத்தம் வழங்கினாலும், அதன் வகையை மீண்டும் பரிசோதித்துவிட்டுதான் வழங்கு வோம். மீண்டும் இதுபோன்று தவறேதும் நடைபெறாமல் கவனமாகப் பார்த்துக் கொள் கிறோம்” என்றார்.

உயிருக்கே ஆபத்தாக முடியும்

ரத்தத்தில் ஒருசில வகைகள் மட்டுமே மற்ற வகை ரத்தம் கொண்டவர்களுடன் ஒத்துப் போகும். தவறுதலாக மாற்று ரத்த வகையை ஒருவரது உடலில் செலுத்தினால் அது உயிருக்கே ஆபத்தாய் முடிந்துவிடும் என்கின்றனர் மருத்துவர்கள்.

ஒரு நோயாளிக்கு ரத்தம் ஏற்றுவதற்கு முன்பாக தானமாகப் பெறப்பட்ட ரத்தத்தை பரிசோதனை செய்துவிட்டுதான் ஏற்ற வேண்டும் என்பது மருத்துவ விதி. ஆனால், அவை முறையாகக் கடைபிடிக்கப்படுகிறதா என்பது கேள்விக்குறி.

ரத்த வகையைக் கண்டறி வதிலேயே இத்தனை தவறுகள் நடைபெறும்போது அதிலிருந்து எச்ஐவி தொற்று உள்ளிட்ட பல்வேறு நோய்களை கண்டறிவதில் முழுமையான கவனம் செலுத்தப்படுகிறதா என்பதும் கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான அம்சமாகும்.

கண்காணிப்பு தேவை

புற்றீசல் போல் ஆங்காங்கு முளைத்து நிற்கும் சிறிய மற்றும் பெரிய அளவிலான ரத்தப் பரிசோதனை நிலையங்கள், ரத்த வங்கிகள் அனைத்தையும் முறையான ஆய்வுக்கு உட்படுத்தி, தகுதியான பணியாளர்கள் அங்கு பணியாற்றுகின்றனரா, தரமான உபகரணங்கள் உள்ளனவா, ஆய்வு முறைகள் முறையாக நடைபெறுகிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டும் என்பதுதான் அனைவரது கோரிக் கையாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x